விளம்பரங்களால் வீணான நேரம்; ஆடவருக்கு ரூ.65,000 இழப்பீடு வழங்க திரையரங்கிற்கு உத்தரவு

2 mins read
40916524-0d3a-450c-9d8f-aa046671f6fa
நேரமும் பணமாகக் கருதப்படுவதாகக் கூறி, மனுதாரருக்கு இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. - மாதிரிப்படம்

பெங்களூரு: திரைப்படத்தைத் திரையிடுவதற்குமுன் நீண்ட நேரத்திற்கு விளம்பரங்களை ஒளிபரப்பியதால் தனக்கு 25 நிமிடங்கள் வீணானதாகவும் மனவுளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி, இந்தியாவின் பெங்களூரு நகரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ‘பிவிஆர்-ஐனாக்ஸ்’ திரையரங்கிற்கும் ‘புக்மைஷோ’ நுழைவுச்சீட்டு விற்பனைத்தளத்திற்கும் எதிராக வழக்கு தொடுத்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாலை 4.05 மணிக்குத் தொடங்கவிருந்த ஒரு திரைப்படத்திற்கு மூன்று நுழைவுச்சீட்டுகளை வாங்கினார் அபிஷேக் என்ற அந்த ஆடவர்.

அறிவிப்பின்படி, படம் மாலை 6.30 மணிக்கு முடிவடைந்துவிடும் என்பதால் அதன்பின் மீண்டும் பணிக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஆனால், விளம்பரங்களையும் மற்ற படங்களின் முன்னோட்டக் காட்சிகளையும் ஒளிபரப்பி, 4.30 மணிக்கே படத்தைப் போட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால், கிட்டத்தட்ட அரைமணி நேரம் வீணாகிவிட்டதாக அபிஷேக் தமது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், அந்தக் காலதாமதத்தால் தான் திட்டமிட்டிருந்த மற்ற வேலைகளை மேற்கொள்ள இயலவில்லை என்றும் அவற்றால் ஏற்பட்ட இழப்பைப் பணத்தைக்கொண்டு ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் நீதிமன்றம், “நேரமும் பணமாகக் கருதப்படுகிறது,” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

அபி‌ஷேக்கின் நேரத்தை வீணாக்கியதற்கு இழப்பீடாக ரூ.50,000, அவருக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்காக ரூ.5,000, வழக்கு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.10,000 என மொத்தம் 65,000 ரூபாயை (S$1,005) வழங்க வேண்டும் என்று பிவிஆர் மற்றும் ஐனாக்சிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவற்றுக்கு நூறாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆயினும், திரையரங்குகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதற்கும் நுழைவுச்சீட்டு பதிவுசெய்யும் தளமான புக்மைஷோவிற்கும் தொடர்பு இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்