போலி இணையத்தளங்கள் குறித்துத் திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

போலி இணையத்தளங்கள் குறித்துத் திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

1 mins read
2d8af9e7-51ab-40c7-87b5-ba3cd9625d1c
திருப்பதி ஏழுமலையான் கோயில். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையத்தளம் போன்றே காட்சியளிக்கும் போலி இணையத்தளங்கள் மூலம் மோசடிகள் நடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி இதுகுறித்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி போன்ற சேவைகளை வழங்குவதாகப் பல போலி இணையத்தளங்களை உருவாக்கி பக்தர்களைச் சிலர் மோசடி செய்துவருகின்றனர். இணையத்தளங்கள் மட்டுமன்றி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மோசடி செய்து வருகின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் மட்டுமே இத்தகைய சேவைகளுக்குப் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திரு ரவி வலியுறுத்தினார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரையோ, சின்னத்தையோ, சமூக வலைத்தளத்தையோ போலியாக நிர்வகித்து வருபவோர்மீது திருப்பதி தேவஸ்தானம் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறிய அவர், இதுவரை 259 போலி இணையத்தளங்கள்மீது அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பக்தர்கள் தேவஸ்தானத்தின் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் வரும் பொய்யான தகவல்களை நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் என்றும் முன்பின் தெரியாதோரை நம்பிப் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்