திருவனந்தபுரம்: நடிகர் தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாகியுள்ள ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திரையரங்குகளில் படங்களைப் பதிவுசெய்து, திருட்டுப் பதிவுகளாக விற்றுவந்த இருவரைக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
திருவனந்தபுரத்திலுள்ள ஏரிஸ் பிளெக்ஸ் திரையரங்கில் ‘ராயன்’ திரைப்படத்தைக் கைப்பேசி மூலம் பதிவுசெய்தபோது அவர்கள் பிடிபட்டனர்.
மதுரையில் திரைப்படங்களின் திருட்டுப் பதிவுகளை விநியோகிப்பதற்கு அக்கும்பல்தான் பொறுப்பு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்படத்திற்கு உரிய நுழைவுச்சீட்டை வாங்கி, திரையரங்கிற்குள் நுழைந்து, கைப்பேசி வழியாகப் படத்தைப் பதிவுசெய்வதை அக்கும்பல் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
திருட்டுப் பதிவுக் கும்பலைக் கைதுசெய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திரைத்துறை தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரான ஸ்டீஃபன், ‘ராயன்’ படம் வெளியான முதல் நாளே (ஜூலை 26 வெள்ளிக்கிழமை) திரையரங்கில் படத்தைப் பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.
திரையரங்க மேலாளரும் வேறு சிலரும் அவரது சந்தேகப்படும்படியான நடவடிக்கையைக் கண்டு, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தற்போது அவர் கொச்சியில் வைத்து விசாரிக்கப்படுவதாக ‘மனோரமா’ இணையச் செய்தி வெளியிட்டுள்ளது.