புதுடெல்லி: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடியில் இரண்டாவது முனையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது கொள்கலன் முனையம் அமைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியப் பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் ‘வடிவமைத்து, கட்டி, நிதியளித்து, இயக்கி, ஒப்படைக்கும்’ (டிபிஎஃப்ஓடி) அடிப்படையில் 40 ஆண்டுகால ஒப்பந்தத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. 900 மீட்டர் நீளமுள்ள கப்பல் நிறுத்துமிடம், 18 மீட்டர் ஆழத்துடன் இந்த முனையம் அமைக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் கொள்கலன்களைக் கையாளும் திறன் அதிகரிக்கும்.
மேலும், 24,346 கொள்கலன்கள் வரை சுமந்து செல்லும் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களும் இங்கு வந்துசெல்ல முடியும். முனையம் அமைப்பதற்கான ரூ.4,288.26 கோடி செலவைத் தனியார் ஒப்பந்ததாரர் ஏற்றுக்கொள்வார்.
தூர்வாரும் பணிகளுக்கான ரூ.450 கோடி செலவைக் காமராஜர் துறைமுக நிர்வாகம் தனியாக ஏற்கும். கொள்கலன் முனையம் அமைப்பதற்கான இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தில் ரூ.2,429.32 கோடி செலவில் 11 லட்சம் கொள்கலன் திறன் உருவாக்கப்படும். முதல் கட்டப் பணிகள், ஒப்பந்தம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 24 மாதங்களுக்குள் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
வணிகச் செயல்பாடுகள் 25வது மாதத்தில் தொடங்கும். இரண்டாம் கட்டத்தில் ரூ.1,858.94 கோடி செலவில் ஒன்பது லட்சம் கொள்கலன் திறன் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் 25வது மாதத்தில் தொடங்கி 48வது மாதம் வரை நடைபெறும். 49வது மாதத்தில் முழு அளவிலான வணிகச் செயல்பாடுகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
