பெங்களூரு: ஆளில்லா வானூர்தி வழியாக பெங்களூரில் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலைக் கடந்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தில் பொருள்களை வேகமாகக் கொண்டு செல்லும் விநியோகச் சேவையை டில்லியில் மையம் கொண்டுள்ள ‘ஸ்கை ஏர்’ என்ற தனியார் ஆளில்லா வானூர்தி நிறுவனம் வழங்குகிறது.
தேவைப்படும் பொருள்களை சராசரியாக ஏழு நிமிடங்களில் சேர்க்கக்கூடிய வல்லமை இந்தச் சேவைக்கு உள்ளது.
120 மீட்டர் உயரத்தில் குறிப்பிட்ட சில வான்பகுதிகளில் இந்த ஊர்திகள் பறப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக ஸ்கை ஏர் தலைமை நிர்வாகி அங்கித் குமார் கூறியுள்ளார்
பெங்களூரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள், மருந்துகள் மற்றும் பரிசோதனைக்கான மாதிரிகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஆளில்லா வானூர்திச் சேவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டன.
அப்போதிலிருந்து அத்தகைய சேவைகள் சிறிய அளவுக்குள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஸ்கை ஏர் நிறுவனம், வான்வழி அஞ்சல் சேவையை தொடங்கியுள்ளது. கோனனகுந்தே, கனகபுரா பகுதிகளில் இயங்கி வரும் இந்தச் சேவை, மற்ற பகுதிகளுக்கும் விரிவுகாண உள்ளது.


