நியூயார்க்: டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் வெளியிட்ட கருத்துகள், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அமைகிறது என அந்நாடு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் விவகாரங்களை அனைத்துலக அமைப்புகள் அரசியல்படுத்துவதையும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையையும் தவிர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் கலாசார, வரலாற்றுப் பின்னணிகளை மதித்து, நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது.
ஐநா பொதுச்சபையின் 81வது அமர்வின் மூன்றாவது குழுக்கூட்டத்தில், ‘மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை’ குறித்த விவாதத்தின் போது ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் அனுஜ் ஸ்வரூப் உரையாற்றினார்.
அப்போது, மனித உரிமைகள் பேரவையுடன் நம்பிக்கையுடனும் கூட்டு உணர்வுடனும் இந்தியா தொடர்ந்து பணியாற்றும் என்றார் அவர்.
அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் அரசியல்படுத்துதலுக்கு அப்பாற்பட்டு, நடுநிலையான வழிகாட்டியாகச் செயல்படும் என நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், பன்முகத்தன்மை, அமைதியான சகவாழ்வு ஆகிய பண்பாட்டு நெறிமுறைகளே இந்தியாவின் அணுகுமுறைக்கு அடிப்படை என்றார்.
இந்தியாவின் வன உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான மனுக்கள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகப் பழங்குடியினர் உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஆல்பர்ட் பரூமேவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு அனுஜ் ஸ்வரூப், அந்த அறிக்கையை ஏற்க இயலாது என்றார்.
இந்தக் கூற்று அதிகாரபூர்வத் தரவுகள் ஏதுமின்றி, ஒரு நபர் அளித்த தகவலின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்தியா சாடியது.
இந்திய வன உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட 54 லட்சத்துக்கும் அதிகமான மனுக்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை பரிசீலிக்கப்பட்டு, 25 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக திரு அனுஜ் ஸ்வரூப் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 60 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் இந்தியா இக்கூட்டத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டது.
