புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிரந்தரவாச அட்டை (கிரீன் கார்டு) விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளில் அந்நாட்டு அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன், ‘எச்-1பி’ (H-1B) விசா மூலம் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களைக் கொத்தடிமைகள் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் விமர்சித்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்போசிஸ், விப்ரோ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் எட்டு முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு நிரந்தரவாச அட்டை கோரி விண்ணப்பிக்கும் ‘பெர்ம்’ (PERM) திட்டத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பது, ஊதியச் சுரண்டலைத் தடுப்பது என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சு, அமெரிக்கத் துணை அதிபரின் பேச்சு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் வரலாற்று ரீதியான, காலனித்துவக் காலத்து அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய நிபுணர்களின் பங்களிப்பு அமெரிக்காவின் பொருளியலுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்திய அரசு, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நன்மைகளை உணராமல் எடுக்கப்பட்டுள்ள இத்தகைய முடிவுகள் இருதரப்பு உறவையும் பகிரப்பட்ட இலக்குகளையும் மேம்படுத்தாது எனத் தெளிவுபடுத்தி உள்ளது.
அதேவேளையில், இந்தத் தற்காலிகத் தடை தங்களின் வழக்கமான வர்த்தகப் பணிகளையோ அல்லது தற்போதைய ‘எச்-1பி’ விசா வைத்திருப்பவர்களின் தகுதியையோ நேரடியாகப் பாதிக்காது என முன்னணி ஐடி நிறுவனங்கள் தெளிவுபடுத்தி உள்ளன.
எனினும், இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலக் குடியுரிமைக் கனவுக்கு அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
