புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துகொள்ளும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்களான ராஸ்நெஃப்ட், லுக்காயில் ஆகியவற்றுக்கு அக்டோபர் 22ஆம் தேதி தடை விதித்தார்.
தடை விதிக்கப்பட்டுள்ள இந்த இரு நிறுவனங்களுடன் பிற நாடோ நிறுவனமோ வர்த்தகம் மேற்கொண்டால், அவற்றின்மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
எந்த மாதிரியான தடையை ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின்மீது அமெரிக்கா விதித்துள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தத் தடை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யப் பொது சந்தையிலிருந்து தான் எண்ணெய் வாங்குகின்றன.
ஆனால், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் ‘ராஸ்நெஃப்ட்’ நிறுவனத்திடமிருந்து எண்ணெய் வாங்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், அந்நிறுவனம்மீது அமெரிக்கா விதித்துள்ள தடை ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பெரிதாகப் பாதிக்கக்கூடும்.
இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

