புதுடெல்லி: இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஜவுளித்துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.
இருநாடுகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழு ஒன்று, ஜவுளித் துறையில் ஆழமான பொருளியல் ஈடுபாட்டிற்கான வழிகளை ஆராய்வது குறித்து விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானின் பொருளியல் உறவுகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஷஃபியுல்லா அசாம் தலைமையிலான உயர்மட்டக் குழு, புதுடெல்லியில் இந்திய ஜவுளி அமைச்சின் வர்த்தக ஆலோசகர் ஏ. பிபின் மேனனைச் சந்தித்ததாக ஜவுளி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் பருத்தி விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவு, பயிற்சி, ஏற்றுமதி மற்றும் விசாக்களை எளிதாக்குதல் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இரு நாடுகளின் தொழில் அமைப்புகளுக்கு இடையே நெருக்கமான ஈடுபாடு உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டன.
ஆப்கானிஸ்தானுக்கு ஜவுளி, ஆடைகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் ஏற்றுமதி அளவு மில்லியன் டாலரை எட்டியது. 2024ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து 742.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை இறக்குமதி செய்த ஆப்கானிஸ்தான், உலகின் இரண்டாவது பெரிய பருத்தி உற்பத்தியாளராக இந்தியாவின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
மருத்துவ சிகிச்சை பெற ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு விசா சேவைகள்
இதனிடையே, ஆப்கானிஸ்தான் குடிமக்கள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மீண்டும் விசா சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் பயணமாக புதுடெல்லி சென்ற ஆப்கானிஸ்தான் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் அல்ஹாஜ் நூருதின் அஜிஜி இத்தகவலை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் நாட்டில் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வருவதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்வோம். அவர்களுக்கான வசதிகளை அளிப்பதில் தூதரகம் முக்கியப் பங்கு வகிக்கும். காபூலில் உள்ள இந்திய தூதரகம் அதற்கான திட்டங்களை உருவாக்கும்,” என்றார் அவர்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே சின்னச் சின்ன சிக்கல்கள் இருப்பதாகவும் அவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் திரு அல்ஹாஜ் நூருதின் அஜிஜி தெரிவித்தார்.

