பெங்களூர்: கர்நாடகாவில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது இனி கட்டாயம் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனவோட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் இருக்கை வார் அணிவதும் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெங்களூரு, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து ஓட்டுநர்கள் பலர் இருக்கை வார் அணியாமல் பேருந்துகளை இயக்குவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.
அண்மையில் பெங்களூரில் சில முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வின்போது, இருக்கை வார் அணியாமல் பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர்களை நவீன கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டனர். அதையடுத்து, அவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் தவறாமல் இருக்கை வார் அணிய வேண்டும் என கர்நாடக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பழைய பேருந்துகளில் பழுதடைந்துள்ள இருக்கை வார்களைச் சீரமைத்துத் தரவும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்துக் கழகங்களுக்குப் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
