கர்நாடகா: கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சித்தராமையாவிற்கும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே நடந்த போட்டியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமார் முதல்வராவார் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலத்தை முடித்துள்ளார்.
இதற்கிடையில் முதல்வருக்கு இதை நினைவூட்டும் வகையில் டி.கே.சிவக்குமார் ஒரு பதிவைத் தன் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘வேர்டு பவர் இஸ் வேர்ல்டு பவர்’ (வார்த்தை பலம் உலக பலம்) ஆகும். ஒருவர் தனது வாக்கை காப்பாற்றுவதுதான் உலகில் மிகப்பெரிய பலம் வாய்ந்தது. நீதிபதியாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கருத்து பொருந்தும். யாராக இருந்தாலும் வாக்குப்படி நடந்துகொள்ள வேண்டும்,” என்று பதிவிட்டு இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்தப் பதிவிற்கு முதல்நாள் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவிலும் பகிரங்கமாக இந்தக் கருத்தைக் கூறினார். அப்போதே கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.
அண்மையில் பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி, கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டியும், தனக்கு முதல்வர் பதவியை மேலிட தலைவர்கள் வழங்க வலியுறுத்தியும் டி.கே.சிவக்குமார் இந்தக் கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் (மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி) அமைதி காத்து வந்தாலும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முடிவு குறித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதற்கு இரு தலைவர்களும் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

