கிருஷ்ணகிரி: நள்ளிரவு நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் பெண் ஒருவர் உதவி கேட்டு கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் பல்லவன் வங்கி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் சுமார் 30 வயதுமிக்க ஒரு பெண் திடீரென வீடுகளுக்குள் நுழைவதற்காக முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் தரையில் விழுந்து அடிபட்டு காயம் அடைந்ததாகவும் உதவுங்கள் என்று ஆங்கிலத்தில் உதவி கேட்டு கூச்சலிட்டு ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி இருக்கிறார்.
கொள்ளைக் கும்பல் ஒரு பெண்ணை வைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பார்கள் என்று நினைத்து யாரும் கதவைத் திறக்க முன்வரவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பான கண்காணிப்புக் கருவியின் காட்சிகள் இணையத்தில் பரவத் தொடங்கின.
உடன் நடவடிக்கையில் இறங்கிய காவலர்கள் சம்பந்தப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எனவும் அவருக்கும் அவரது கணவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, அவரது கணவரும் உறவினர்களும் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால், பர்கூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் யாரும் கதவைத் திறக்காத காரணத்தினால், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.

