புதுடெல்லி: இந்திய வங்கிகளிலுள்ள கணக்குகளில் 39.2 விழுக்காடு பெண்களுடையவை என்றும் கிராமப்புறங்களில் இன்னும் அதிகமாக 42.2 விழுக்காட்டுக் கணக்குகள் பெண்களுடையவை என்றும் இந்திய அரசாங்க அறிக்கை கூறுகிறது.
புள்ளிவிவரம், திட்ட அமலாக்க அமைச்சு ‘இந்தியாவில் பெண்கள், ஆண்கள் 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீடுகள், தரவுகள்’ என்ற தலைப்பிலான தனது 26வது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) வெளியிட்டது.
பல்வேறு அரசாங்க அமைச்சுகள், துறைகள், அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட மக்கள்தொகை, கல்வி, சுகாதாரம், பொருளியல் பங்கேற்பு, முடிவெடுக்கும் திறன் போன்ற முக்கிய துறைகளில் பாலினம் தொடர்பான குறியீடுகள் அதில் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தத்தில், வங்கிக் கணக்குகளில் 39.2% பெண்களின் பெயர்களில் உள்ளன. வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் 39.7% அளவிற்கு பெண்கள் பங்களிக்கின்றனர். குறிப்பாக, 42.2% வங்கிக் கணக்குகளை பெண்கள் வைத்திருக்கும் கிராமப்புறங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பங்குச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் அறிக்கை சுட்டியது.
அண்மைய ஆண்டுகளில் (2021-2024) உற்பத்தி, வணிகம், சேவைகள் போன்ற துறைகளில் பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதும் அமைச்சின் அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது.
1952ல் 173.2 மில்லியனாக இருந்த இந்தியாவின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2024ல் 978 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2019ல் பெண்களின் வாக்களிப்பு விகிதம் 67.2%ஐ எட்டியது, ஆனால் 2024ல் சற்று குறைந்து 65.8% ஆகப் பதிவானது. எனினும், வாக்களிப்பில் பாலின இடைவெளி குறைந்து, 2024 தேர்தலில் பெண் வாக்காளர்கள் ஆண்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டனர்.
குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரைக் கொண்ட தொழில், உள்நாட்டு வணிக ஊக்குவிப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெண் தொழில்முனைப்பு சாதகமான போக்கை எடுத்துக்காட்டுவதாக அறிக்கை சுட்டியது. 2017ல் 1,943 ஆக இருந்த அத்தகைய புதிய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை 2024ல் 17,405-ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கல்வியில் தொடக்கநிலை, உயர்நிலைகளுக்கான பாலின சமத்துவக் குறியீடு தொடர்ந்து உயர்வாக இருந்து வருகிறது.
பதினைந்து வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய தனிமனிதர்களுக்கான ஊழியர் பங்கேற்பு விகிதம் 2017-18ல் 49.8%ஆக இருந்து. அந்த எண்ணிக்கை 2023-24ல் 60.1% ஆக உயர்ந்தது. இது ஊழியரணியில் பெண்களின் பங்களிப்பு மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
இந்த அறிக்கை பாலினச் சமத்துவத்தில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியான சவால்களையும் பற்றிய விரிவான விவரங்களை அளிக்கிறது. முக்கிய சமூக-பொருளியல் குறியீடுகளை ஆய்வு செய்வதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

