புதுடெல்லி: ‘கேப்டன் ஸ்மித் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன்’ என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் பாராட்டியுள்ளார்.
துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தைக் கைப்பற்றி விபத்தை ஏற்படுத்த முயற்சி நடந்தது. இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டு துணை விமானி ஹம்மாம் அல ஹம்மாமி கடுமையாகத் தாக்கினார். ஆனாலும் ரத்த வெள்ளத்திலும் துணிச்சலுடன் செயல்பட்டு இந்திய விமானி அந்தச் சதியை முறியடித்தார்.
ஸ்மித் மச்சாரின் வீர தீர செயலை உலகமே பாராட்டி வருகிறது.
பல உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருதான குடிமக்கள் வீரதீரச் செயலுக்கான அதிபர் விருது வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ஹெர்சாக் அறிவித்தார். ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேப்டன் ஸ்மித் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் பெற்றுக்கொண்ட எனது கடிதத்தில், நீங்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அக்கடிதத்தில் நான் குறிப்பிட்டது போலவே, நீங்கள் உடல்நலம் தேறியதும் உங்களை இஸ்ரேலுக்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இஸ்ரேல் மக்களின் சார்பாக மிக உயரிய விருதான குடிமக்கள் வீரதீர செயலுக்கான அதிபர் விருது உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்வேன்,’’ என்றும் அந்தப் பதிவில் திரு ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
