யாசகம் கேட்ட பெண்ணுக்கு வாழ்வளித்த இளையர்

1 mins read
f7e02d35-560b-4fcd-9852-4534886e8e49
மணமக்கள். - படம்: தினகரன்

பாட்னா: ரயிலில் யாசகம் கேட்டுப் பிழைப்பு நடத்தி வந்த இளம் பெண்ணை, இளையர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் அண்மையில் ரயில் பயணம் மேற்கொண்ட போதுதான் தனது வருங்கால மனைவியான அந்த இளம் பெண்ணைச் சந்தித்துள்ளார்.

அச்சமயம் அந்த இளம்பெண் ரயில் பயணிகளிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். சிலர் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர் அவரிடம் தகாத முறையில் பேசினர். இதனால் அந்தப்பெண் தர்மசங்கடத்துடன் காணப்பட்டுள்ளார்.

இதைக் கண்ட கோலு யாதவ், அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தார். அந்த இளம் பெண்ணைத் தம்முடன் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார் கோலு யாதவ்.

மேலும் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்திய அவர், இளம்பெண் சந்தித்த பிரச்சினைகள் குறித்து விவரித்ததாகத் தெரிகிறது.

கோலுவின் பெற்றோர் தங்களது மகனின் செயலை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். மனித நேயத்துடன் செயல்பட்ட தங்கள் மகனுக்காக அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்தனர்.

இதையடுத்து, இளம் பெண் கோலு யாதவ் வீட்டிலேயே தங்கினார். அப்போது அந்தப் பெண்ணின் குணநலன்கள் கோலுவுக்கு பிடித்துப்போயின.

இதையடுத்து, பெற்றோரின் முழுச்சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் தாமே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி, அண்மையில் திருமணம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்