தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவால் மேம்படும் நீச்சல்

2 mins read
செயற்கை நுண்ணறிவும் மனிதர்களும் ஒத்திசைவுடன் செயல்படும்போது தொழில்நுட்பத்தின் ஆற்றல் மேலும் விரிவடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
1e25c6aa-eae6-43f3-a204-03c6dc5ca7e8
நீச்சல் பயிற்றுவிப்பை மேலும் துல்லியமாக்கவும் செயல்திறன் மிக்கதாக ஆக்கவும் உதவுகிறது புதிய ஆய்வு. - படம்: சிங்கப்பூர் நீச்சல் சங்கம்

செயற்கை நுண்ணறிவையும் ஆளில்லா வானூர்தியையும் பயன்படுத்தும் அதிநவீனக் கட்டமைப்பு ஒன்றை சிங்கப்பூரின் தேசிய நீச்சல் அணி பயன்படுத்தவுள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தையும் (எஸ்எம்யூ), சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தையும் (எஸ்யுடிடி) சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இது, நூதன கட்டமைப்பையும் நீச்சல் வீரர்களின் ஆற்றலையும் ஆராய்கிறது.

நீச்சல் பாணி, நேரம், நீந்தும் வேகம், உடல் இயக்கத்தின் சமச்சீர்மை ஆகியவற்றை அளவிட இந்தக் கட்டமைப்பால் முடிகிறது.

இந்த ஆய்வுக்குழு தற்போது சிங்கப்பூர் நீர்விளையாட்டுச் சங்கத்துடன் இணைந்து, நீச்சல் வீரர்களின் திறத்தை அளவிடுவதற்கான உடனடித் தரவுப் பகுப்பாய்வை உருவாக்குகிறது. நீச்சல் வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘என்டிசி’ (NTC) எனப்படும் தேசிய பகுப்பாய்வு நிலையத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நீந்தும்போது நீச்சல் வீரர்களுக்கு ஏறத்தாழ எட்டு மீட்டருக்கு மேலிருந்தபடி, உயர் பிரிதிறன் (high-resolution) கேமரா கொண்டுள்ள ஆளில்லா வானூர்தி சுற்றியபடியே படமெடுக்கும். நீச்சல் வீரர்களின் காணொளிப் படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படும்.

டாக்டர் டிரென் நிகோக் துவான் தூ இந்தத் தரவு ஆய்வு மென்பொருளை வடிவமைத்திருக்கிறார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் பாலன் வழிநடத்தும் இந்த ஆய்வுக்குழுவிற்குப் பேராசிரியர் கென்னி சூ ஆலோசகராகச் செயல்படுகிறார்.

நீச்சல் பயிற்றுவிப்பை மேலும் துல்லியமாக்கவும் செயல்திறன்மிக்கதாக ஆக்கவும் இந்த ஆய்வு உதவும் என்று பேராசிரியர் பாலன் கூறினார்.

“கணினி வன்பொருள்களுக்கான மிகையான முதலீட்டுக்குத் தேவை இராது. இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த, பயிற்றுவிப்பு முறைகளுடன் ஒத்துப்போகும் காணொளிப் பகுப்பாய்வு முறை தேவைப்படுகிறது,” என்றார் பேராசிரியர் பாலன்.

“செயற்கை நுண்ணறிவும் மனிதர்களும் ஒத்திசைவுடன் செயல்படும்போது தொழில்நுட்பத்தின் ஆற்றல் மேலும் விரிவடைகிறது. மனிதத்திறன்களுடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும்போது நம் செயல்திறனும் முடிவெடுக்கும் திறனும் கூடுகின்றன,” என்று பேராசிரியர் சூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்