இணையத்தில் பொருள் வாங்குவோரில் 88 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவின் பரிந்துரைக்கேற்ப பொருள்களைத் தேர்வுசெய்வதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும், 88 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு, அதற்காக அதிகம் செலவிடத் தயாராக உள்ளதையும் இந்த ஆய்வு சுட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவின் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், பொருள்கள் குறித்த சுருக்கமான, தெளிவான விளக்கங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பொருள்களைத் தேர்வு செய்வதாக ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இது பயனீட்டாளர் மத்தியில் செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் அந்த ஆய்வு கூறியது.
தென்கிழக்காசியாவின் முன்னணி இணையவழி வணிக நிறுவனமான லசாடா, பயனீட்டாளர் விருப்பங்களைப் பகுப்பாய்வு செய்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 6,000 இணையவழி பயனீட்டாளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், அத்தளங்களில் ஒன்றிணைந்துள்ள செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு, அதன் மீதுள்ள நம்பிக்கை, அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
குறைந்தது 80 விழுக்காட்டினர், வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த வணிகத் தளங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ 60 விழுக்காட்டினருக்கு இணையவழி வணிகங்களில் ஒன்றிணைத்துள்ள பிரபல செயற்கை நுண்ணறிவு அம்சங்களான ‘சாட்பாட்’ (Chatbot) எனப்படும் உரையாடல் மென்பொருள், படங்கள் கொண்டு பொருள்களைத் தேடுதல், மொழிபெயர்ப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு இருப்பதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.
எனினும், 50 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்துவதையும் 30 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே இவற்றைப் பயனுள்ளவையாகக் கருதுவதையும் இந்த ஆய்வு காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த இடைவெளியைக் குறைக்க தரவு சார்ந்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்தலாம் என்றும் அதன்மூலம் பயனீட்டாளர்களுக்கு தடையற்ற வணிக அனுபவத்தை வழங்கும் வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், செயற்கை நுண்ணறிவின் ஒன்றிணைவு வணிக அனுபவத்தை மேம்படுத்தி மேலும் வசதியாக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, பயனீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு மூலம் சரியான உடை அளவுகளைப் பரிந்துரைப்பது, பொருள்கள் குறித்த தெளிவான விளக்கம் அளிப்பது, மதிப்பாய்வுகளின் சுருக்கத்தை அளிப்பது உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியுள்ள லசாடா, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் பயனீட்டாளர்களின் அனுபவம் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

