பழைமையையும் புதுமையையும் இணைப்பது மட்டுமல்லாமல் இந்த இணைப்புக்குச் சேலையைக் கொண்டு கதைசொல்லும் புத்தாக்கமிக்க பரதநாட்டியத்தை மேடையேற்றியது பாஸ்கர்ஸ் கலைக் கழகம்.
தம் தாயார் சாந்தா பாஸ்கர் தமக்கு விட்டுச் சென்றவற்றில் சேலையை ஒரு முக்கியமான பொருளாகக் கருதும் திருவாட்டி மினாக்ஷி பாஸ்கர், 62, அதைக் கொண்டு பரதநாட்டிய நிகழ்வுக்கு மறுவடிவம் கொடுத்துள்ளார்.
சிங்கப்பூரின் முன்னோடிக் கலைஞர்களான தாயார் சாந்தா, தந்தை திரு கே.பி.பாஸ்கருக்குப் பின்னர், அவர்கள் நிறுவிய பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தை நடத்தி வருகிறார் திருவாட்டி மினாக்ஷி.
“2022ல் என் அம்மாவின் மறைவுக்குமுன் அவருடைய புடவைகள், நகைகள் அனைத்தையும் எனக்கு அளித்துவிட்டார். அப்போது, என்னுள் ‘சொத்து என்றால் என்ன’ எனும் கேள்வி எழுந்தது. வித்தியாசமாக அமையும் இந்தப் படைப்பில் எனது சொந்த அனுபவங்களும் கலந்துள்ளன,” என்று திருவாட்டி மினாக்ஷி கூறினார்.
இந்தியர்கள் பலரும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியா உடனான பிணைப்பு அவர்களுக்கு இருந்து வருகிறது. அந்தப் பிணைப்பு, தாய்க்கும் சேய்க்கும் இடையிலான தொப்புள்கொடியைக் குறிக்கிறது. சேலை, தன்னை இந்தியாவுடன் இணைக்கும் ஒரு தொப்புள்கொடி என்று திருவாட்டி மினாக்ஷி கருதுகிறார்.
திருவாட்டி சாந்தாவின் நாட்டியத்தையே மறுஆக்கம் செய்து ‘பந்தனா’ எனும் நாடகம் கலந்த நடனம், எஸ்பிளனெட் அருகிலுள்ள சிங்டெல் வாட்டர்ஃபிரண்ட் தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கிட்டத்தட்ட 350 பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்த இந்த நிகழ்ச்சியில் மேலும் பல புதுமைகள் காத்திருந்தன.
மொத்தம் 11 நடனமணிகளும் எட்டு இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து மிளிரச் செய்த நிகழ்ச்சியில் முதன்முறையாக மேடையில் பரதநாட்டியத்திலே பயணப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டு பார்வையாளர்களைப் பிரம்மிக்கவைத்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிகழ்ச்சியின் இசை இயக்குநரான முனைவர் கானவிநோதன் ரத்னம், 63, ஒத்திகைகளின்போது ஏற்பட்ட சவால்களை நினைவுகூர்ந்தார்.
“என்னிடம் இசை பயலும் என் மாணவர்கள் பிழையான சுவரத்தில் இசைக்கருவிகளை வாசிக்கும்போது அவர்களைக் கண்டிப்பது வழக்கம். ஆனால், இந்தப் படைப்புக்காகச் சில பாடல்களை அபசுவரமாக வாசிக்க வேண்டியிருந்தது.
“அது நானும் எனது இசைக்குழுவும் மேற்கொண்ட சவால் என்று சொல்லலாம்,” என்றார் முனைவர் கானவிநோதன்.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரை இல்லமாகக் கொண்ட சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரின் கதையை நடன வடிவில் கொண்டுவந்த ‘பந்தனா’, குடிபெயர்ந்த நாட்டுக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான பந்தத்தை வெளிப்படுத்தியது.
2017, 2018ஆம் ஆண்டுகளில் திருவாட்டி சாந்தாவுக்கு குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) படிக்க வாய்ப்பு கிட்டியது.
துகள்கள் எவ்வாறு நகர்ந்து ஆடுகின்றன என்பதைக் கருத்தில்கொண்டு பரதநாட்டியத்தையும் குவாண்டம் இயற்பியலையும் இணைத்து ஒரு புத்தாக்க நடனப் படைப்பைக் குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான மையத்துடன் இணைந்து திருவாட்டி சாந்தா உருவாக்கினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைநிகழ்ச்சியில் அரங்கேறிய இந்த நடனம், பந்தனா நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி பெற்றது.
“நாடகத்திலும் நடனத்திலும் உள்ள நுட்பங்களை ஆராயவும் எனக்கும் என் சக நடனமணிகளுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது,” என்றார் பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் நடனமணியான தயணிதா ராணி, 23.
கடந்த 18 ஆண்டுகளாகப் பரதநாட்டியம் பயின்று வரும் தயணிதாவிற்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. நடனமணிகள் அனைவரும் இணைந்து நடனங்களுக்கான தங்கள் கருத்துகளை ஆசிரியருடன் பகிர்ந்து, ஒன்றிணைந்து பந்தனா நிகழ்ச்சியை உருவாக்கினர்.
“ஏறக்குறைய எட்டு மாதங்களாக இந்த நடன நிகழ்ச்சிக்காக நாங்கள் இணைந்து தயாரானோம். என் சக நடனமணிகளை வழிநடத்தவும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்று தயணிதா கூறினார்.

