தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணைப் பறிக்கும் சங்குப் பூவின் பலன்கள்

2 mins read
0de415b3-1f03-4a08-b5e2-f20c32a60125
கண்ணைப் பறிக்கும் சங்குப் பூக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்த்தால் சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும் சங்குப் பூ அதன் நீல வண்ணத்திற்குப் பெயர்பெற்றது.

ஆங்கிலத்தில் ‘புளூ பீ ஃபிளவர்’ என்றழைக்கப்படும் சங்குப் பூ அதன் வண்ணத்திற்கு அப்பாற்பட்டு பல நன்மைகளுக்கும் அறியப்பட்ட ஒன்று.

அண்மைய காலத்தில் பல உணவுகளில் சங்குப் பூ மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சங்குப் பூ சாதம், ‘நாசி லெமாக்’ சாதத்திற்கு சங்குப் பூவைப் பயன்படுத்தி சாதத்தை நீல வண்ணத்தில் பரிமாறுவது போன்றவை அவற்றில் அடங்கும்.

இந்தப் பூ பெரும்பாலும் தென்கிழக்காசிய சமையலில் உபயோகிக்கப்படுகிறது.

தண்ணீரில் ஊறவைக்கும்போது இப்பூவிலுள்ள நீல நிறமி தனியாகப் பிரிகிறது. அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்துவிட்டால் அது உடனடியாக ஊதா நிறத்திற்கு மாறிவிடும்.

ஆக்சிஜனேற்றத்தடுப்பான் (antioxidant) அதிகம் இருப்பதால் சங்குப் பூ உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது.

சங்குப் பூ தண்ணீரை அடிக்கடி பருகி வந்தால் நோயெதிர்ப்பாற்றல் கூடும். சருமம் பொலிவுபெறும். மூப்படையும் அறிகுறிகள் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

இத்தகைய பலன்களுடன் மூளைக்கும் இப்பூ நல்லது என்று நம்பப்படுகிறது.

நினைவாற்றல் அதிகரிப்பதற்கும், அறிவாற்றல் செயல்பாடு சீராவதற்கும், நரம்பு அணுக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கும் துணைபுரிகிறது சங்குப் பூ.

சங்குப் பூவைத் தேநீராகப் பருகும்போது அது ஒருவரை அமைதியடையச் செய்வதாகவும் நம்பப்படுகிறது.

பதற்றத்தைக் குறைப்பது, சீரான தூக்கத்திற்கு வழியமைத்தல் போன்ற நன்மைகளும் அதில் அடங்கியுள்ளன.

முடி வளர்ச்சிக்கும் துணைபுரியும் சங்குப் பூ, தலைமுடி விரைவாக நரைப்பதிலிருந்தும் பாதுகாக்கிறது.

சங்குப் பூ ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் ஒருவருக்கு நீரிழிவு வரும் அபாயமும் குறையும். மேலும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சங்குப் பூ ஒருவரின் இருதய நலனையும் காக்கிறது.

சங்குப் பூ மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெயில் நிறைந்த காலகட்டத்தில் இந்தச் செடி எளிதில் வளரும். அது பெரும்பாலும் வேலிகள் அல்லது மேல்மாடங்களில் (பால்கனி) வளர்வதைக் காணலாம்.

இதன் பூக்களைப் பறித்து, உலர்த்தி, தேநீருக்காகச் சேமித்து வைக்கலாம் அல்லது வண்ணமயமான பானங்களுக்காக அவற்றின் சாற்றை ஐஸ் கட்டிகளாகவும் உறைய வைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்