‘போன் ப்ரோத்’ எனப்படும் எலும்பு சூப்பில் பல நன்மைகள் உள்ளன என்று அண்மையில் சமூக ஊடகத் தளங்களில் தகவல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகத் தளங்களில் காணொளிகள் பதிவேற்றம் செய்பவர்களிலிருந்து, மருத்துவர்கள் வரை பலர் மிருகங்கள், குறிப்பாக ஆடு, கோழி, மாடு போன்றவற்றின் எலும்புகளை வைத்து தயாரிக்கப்படும் சூப் ஆரோக்கியமானது என்கிறார்கள்.
பழுப்பு நிறத்தில் இருக்கும் இதைக் குடிக்கும்போது ஒருவரின் எலும்புகளும், தசைகளும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக, இறைச்சி அதிகமாக இருக்கும் மாமிசத்தின் எலும்புகளை அதிக நேரம் வேகவைத்துதான் அச்சாறு தயாரிக்கப்படுகிறது.
அதிக நேரம் வேகவைப்பதால் அந்த மாமிசத்தில் அடங்கியுள்ள புரதச்சத்து அகற்றப்பட்டு சூப்பில் சேர்க்கப்படுகிறது. எலும்புச் சாற்றில் இருக்கும் புரதச்சத்து பெரும்பாலும் மாமிசத்தின் திசுக்களை வலுவாக வைத்திருக்க உதவும் கொலாஜெனிலிருந்து வருகிறது.
மூட்டுகள்
எலும்புச் சாற்றைப் பருகும்போது ஒருவரின் உடலில் இருக்கும் கோலஜென் உற்பத்தி அதிகமாகிறது. இது மூட்டுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வையும் அளிக்கிறது. எலும்புகளை வேகவைத்துத் தயாரிக்கப்படும் சூப்பில் மஞ்சள் போன்ற இதர மூலிகைகளையும் சேர்த்து தயாரிக்கும்போது உடலில் இருக்கும் வீக்கங்கள், மூட்டு வலி ஆகியவையும் குணமடையும்.
குடல் ஆரோக்கியம்
எலும்பு சூப்பில் ‘குளூட்டமின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. அது உடலின் இரைப்பைக் குடலை வரிசைப்படுத்தும் திசுக்களின் செயல்பாட்டைக் காக்க உதவும். குளூட்டமின் அதிகம் நிறைந்துள்ள உணவு வகையான எலும்பு சூப்பை அவ்வப்போது பருகி வந்தால் ஒருவரின் குடல் நலன் பாதுகாக்கப்படும்.
அதிக புரதச்சத்து
புரதம் ஒருவரின் உடலுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் சத்து. தேவையான அளவு புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்வது ஒருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கும். சாதாரணமாக மாமிசத்தைச் சமைத்து சாப்பிடுவதைவிட எலும்புச் சாற்றில் இன்னும் அதிகமான புரதச்சத்து உள்ளது. கோழி எலும்புகளால் செய்யப்படும் குழம்பில் கிட்டத்தட்ட 20 கிராம் புரதச்சத்து உள்ளது.
தோல் நீண்டு சுருங்கும் தன்மை
வயதாகும்போது உடலில் உற்பத்தியாகும் கோலஜென் அளவு குறையத் தொடங்கும். இதனால் தோலில் சுருக்கங்கள் வரத் தொடங்கும். தோல் நீண்டு சுருங்கும் தன்மையும் குறையும். இதை முறியடிக்க எலும்புச் சாறு குடித்து வந்தால் கோலஜென் உற்பத்தி அதிகரிக்க தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
எலும்புச் சாறு அதிகம் பருகப்பட்டால்….
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல எதையும் ஓர் அளவுக்குதான் சாப்பிட்டு வர வேண்டும். இதர சூப் வகைகள் போல எலும்புச் சாற்றிலும் அதிக அளவு சோடியம் உள்ளது. கடைகளில் வாங்கி குடிப்பதற்குப் பதிலாக வீட்டில் தயாரிக்கப்படும் எலும்பு சூப் சிறந்தது. அதுவும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி எலும்பு சூப் குடிக்காமல் இருப்பது நல்லது.

