மெல்லிசையும் பல்வண்ணமும் கலந்த ‘சிகண்டி’ நாட்டிய நாடகம்

2 mins read
8d7dc890-747b-421d-b768-369cf3c81061
‘சிகண்டி’ நாட்டிய நாடகத்தில், பீஷ்மரை மகாபாரதப் போரில் வீழ்த்திய வெற்றிக் களிப்புடன் நிற்கும் ‘சிகண்டி’ வேடத்தில் மின்ஹஸ் கான். - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

மகாபாரதத்தில் துணைப் பாத்திரமான சிகண்டி என்ற போர்வீரனின் கதையை மையப்படுத்தும் நாட்டிய நாடகத்தை ‘சிஃபாஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் மேடையேற்றியது. 

பிதாமகர் பீஷ்மரை வீழ்த்த அம்பை என்ற இளவரசி, மறுபிறவி எடுத்து ஆண் உருவம் பூண்டு போர்க்களம் புகும் கதை, உணர்வுகள் நிறைந்த  நிகழ்த்துகலை வடிவமாக உயிர்பெற்றது. 

எஸ்பிளனேட் அரங்கில் நவம்பர் 28 முதல் 30 வரை இந்தப் படைப்பைக் காண ரசிகர்கள் பலர் கூடியிருந்தனர்.

இந்துஸ்தானி செவ்விசை கமழ, பல்வண்ண விளக்குகளும் கதக் நடனமணிகளுடன் சுழன்றாடின. பார்ப்பவருக்குப் பரவசமூட்டும் காட்சிகள் இதில் ஏராளம்.

‘சிகண்டி’ நாட்டிய நாடகக் காட்சி. 
‘சிகண்டி’ நாட்டிய நாடகக் காட்சி.  - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

கோபம் நிறைந்த கதாபாத்திரமாக அம்பையைக் கருதுபவர்கள், அவளுக்குள்ளும் மென்மை இருப்பதை இந்தப் படைப்பின்வழி உணரலாம்.

மென்மையான பெண் பிள்ளையாகப் பிறந்து, இளம் மனத்தைக் காதலுக்குப் பறிகொடுத்த அம்பையின் உணர்வுகளைப் பாடலும் நடனமணிகளின் முகபாவங்களும் எடுத்துக்காட்டின. சமியுல்லாஹ் கானின் உருக்கமான இசைப்படைப்பு, உணர்வுகளின் பெட்டகமாக இருந்தது. 

வாழவேண்டிய மணவாழ்க்கை பீஷ்மரால் சற்றும் எதிர்பாராதவிதமாகப் பறிக்கப்பட்ட நிலையில் கோபம் அடைந்து தன் வாழ்க்கையை வீணாக்கிய பீஷ்மரைத் தீர்த்துக்கட்ட வரம் வாங்கி அம்பை தன்னை நெருப்புக்கு இரையாக்கும் காட்சியும் நடனம்வழி காண்பிக்கப்பட்டது.

அந்தக் காட்சியில் அம்பையைச் சுற்றி சிவப்பு, ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து நெளிந்து வளைந்தாடிய நடனமணிகள், தொலைவிலிருந்து எரியும் நெருப்புக்கற்றைகளைப் போல காட்சியளித்தனர்.

‘அம்பை’யைச் சுற்றி, நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்கும் நடனமணிகள்.
‘அம்பை’யைச் சுற்றி, நெருப்பு வளையம் போலக் காட்சியளிக்கும் நடனமணிகள். - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

முக்கிய ஆண் கதாபாத்திரங்களைப் பொறுத்தவரையில் சிகண்டியாக நடித்த மின்ஹஸ் கானும் பீஷ்மராக நடித்த பி. என். விகாசும் சிறப்பாகத் தங்களது பாத்திரங்களில் மிளிர்ந்தனர். அவர்கள் இருவரது கதாபாத்திரங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் திறம்பட காண்பிக்கப்பட்டது.

பெண்ணுறுப்புகளுடன் பிறந்தும் ஆணாக வளர்க்கப்பட்ட சிகண்டியின் உணர்வுகள், அவரது வாழ்நாள் ஊசலாடுபவையாகும். முழுமையான ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாத நிலையிலும் அவ்விரு பாலினரின் உணர்வுகள் இவரிடத்தில் மாறி மாறி பெருகித் தேய்வதை ரசிகர்கள் காண முடிந்தது.

மாறாக, திரெளபதையின் ஆபத்திலுமே சலனமின்றி எல்லாவற்றிலிருந்தும் எட்டி நின்ற பீஷ்மரின் நடுநிலையான, பற்றுதல் இல்லாதத் தன்மையை பரதநாட்டிய ஆசிரியர் விகாஸ் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். 

அம்பையாக நடித்த ஜோதிகா ஜோஷி, கே ஹெச் ஆகியோர் நடனத்திற்கும் நடிப்புக்கும் சமமான முக்கியத்துவம் தந்திருந்தனர். இந்தக் கதையில் சிவபெருமான் மீதான பாத்திரங்களின் பக்தியுணர்வு இழையோடி வருவதால் அதனை அவ்வாறே நடனப்படைப்பில் காண்பிக்கப்பட்டிருக்கலாம்.

‘சிகண்டி’ நாட்டிய நாடகக் காட்சி. 
‘சிகண்டி’ நாட்டிய நாடகக் காட்சி.  - படம்: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

சமுதாய அறம், தனிப்பட்ட விருப்பம் என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மனப்போராட்டத்தைப் பற்றிய ஆய்வு இந்தக் கதைக்குத் தேவைப்பட்டதாகக் கலைநய இயக்குநர் கெளரி திவாகர் தெரிவித்தார். 

மனக்காயங்களை ஆற்றி கேள்வி கேட்கத் தூண்டும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு என்பதற்கு ‘சிகண்டி’ நாட்டிய நாடகம் ஓர் எடுத்துக்காட்டு என்று நிர்வாக இயக்குநர் மேனகா கோபாலன் குறிப்பிட்டார். 

குறிப்புச் சொற்கள்