‘தமிழ் நெஞ்சர்’ என்.ஆர். கோவிந்தன் காலமானார்

2 mins read
841291a1-4ee2-43ba-84cc-428f34ee80d5
தொடர்ந்து 45 ஆண்டுகளாகச் சிங்கப்பூர்த் தமிழர்களை ஒருங்கிணைத்து ‘தமிழர் திருநாள்’ விழாவை நடத்தியவர் டாக்டர் என்.ஆர். கோவிந்தன். - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்

சிங்கப்பூரின் மூத்த சமூக அடித்தளத் தலைவரும் நீண்டகாலம் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவராகச் செயலாற்றியவருமான ‘தமிழ் நெஞ்சர்’ டாக்டர் என் ஆர் கோவிந்தன் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) மாலை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 81.

ஜூரோங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவராகச் செயலாற்றியதுடன், எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை உட்பட பல்வேறு மொழி, சமூக அமைப்புகளில் தொடர்ந்து பங்காற்றி வந்தார். தமிழவேள் கோ. சாரங்கபாணி தொடங்கி வைத்த தமிழர் திருநாளைத் தொடர்ந்து முன்னின்று நடத்தினார். ‘கவிவாணர்’ ஐ உலகநாதன் நிறுவிய மாதவி இலக்கிய மன்றத்தையும் நடத்திவந்தார்.

“நான் பார்த்த முதல் சமூகத் தலைவர் இவர். மிகவும் துடிப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுவார். எங்களையும் மொழி சார்ந்தும் சமூகம் சார்ந்தும் செயல்பட ஊக்குவிப்பார். அவரது மறைவு பேரிழப்பு,” என்று வருத்தத்துடன் கூறினார் கவிஞர் இறை.மதியழகன்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரு கோவிந்தனை நானும் இறை. மதியழகனும் நலம் விசாரிக்கச் சென்றோம். அதற்குச் சில நிமிடங்கள் முன்பு அவர் உயிர் பிரிந்ததை அறிந்து பேரதிர்ச்சியுற்றோம். எனக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரை இழந்துவிட்டது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அப்துல் கலாம் லட்சியக் கழகத் தலைவர் அருமைச்சந்திரன்.

“ஒரு பெண் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவராக வேண்டும் என ஊக்குவித்த மாமனிதரை இழந்து வாடுகிறோம்,” என்று மன்றத்தின் தற்போதைய தலைவர் சித்ரா மெய்யப்பன் கூறினார்.

“கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து என்னைத் தொடர்ந்து வழிநடத்தி வந்தவர் திரு கோவிந்தன்,” என்ற அவர், எஸ்ஜி 60 தொடர்பில் நீண்டதூர நடைப்பயிற்சி நிகழ்ச்சியை நடத்துவதில் ஆர்வமாக இருந்தார் என்றும் தாமும் பங்கேற்பதாகக் கூறியிருந்தார் என்றும் சொன்னார்.

“மொழிப்பற்றும் தேசப்பற்றும் மிகுந்தவர் திரு கோவிந்தன்,” என்று கூறிய முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா தினகரன், “இளையர்களைத் தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட ஊக்கப்படுத்துவார். குழந்தைகளிடம் மொழி சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து உழைத்தார். கனிவானவர். அவரது இழப்பு இந்திய சமூகத்துக்குப் பேரிழப்பு,” என்று தெரிவித்தார்.

அவரது நல்லுடல் நாளை (வெள்ளிக்கிழமை) புளோக் 276, தோ குவான் ரோட்டிலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சனிக்கிழமையன்று தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்