ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூரில் உள்ள டெசாரு கோஸ்ட்டை உலக அரங்கமாக மாற்றிய ‘ஒம்பாக் விழா’வின் இரண்டாவது பதிப்பு செப்டம்பர் 12 முதல் 14 வரை நடைபெற்றது.
இசை, கலை ஆர்வலர்கள், குடும்பங்கள் எனப் பலதரப்பட்டோரை ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் ‘ஒம்பாக் விழா’ அமைந்திருந்தது. மேற்கத்திய இசைக்குழுவான ‘சிம்ப்லி ரெட்’, புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஜார்ஜ் கிளிண்டன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் மேடைப் படைப்புகள், சமையல் கலை நிகழ்ச்சிகள், குடும்பக் கேளிக்கை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்கள் விழாவில் நிறைந்திருந்தது.
புகழ்பெற்ற சமையற்கலைஞர் ஆண்ட்ரூ வால்ஷின் ‘சஸோன் தபஸ் அன்ட் க்ரில்’ (Sazón Tapas & Grill), நவீன முறைகளால் சமைக்கும் கலையில் புதுமை சேர்த்த ‘கார்பன் கேஎல்ஸ் ஸ்மோக் அன்ட் ஃபையர்’ (Carbon KL’s Smoke & Fire), ஜோகூரின் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டாடிய ‘ஃப்ளேவர்ஸ் ஆஃப் ஜோகூர்’ (Flavours of Johor) ஆகிய உணவகங்கள் வந்திருந்தோர்க்கு மறக்க முடியாத விருந்தை ஏற்படுத்தித் தந்தன.
பண்பாடு, சமூகம், இசை, உணவு, கலை ஆகியவற்றை ஒரே மேடையில் கொண்டாடிய ஒம்பாக் விழா 2025, தென்கிழக்காசியாவில் கலாசார நிகழ்ச்சிகளின் மையமாக ஜோகூர் உருவாவதில் டெசாரு கோஸ்ட் ஆற்றிவரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக விழாவின் இயக்குநர் கரினா ரிட்சுவான் தெரிவித்தார்.
‘ஒம்பாக் விழா’ போன்ற மேலும் பல நிகழ்ச்சிகள் குறித்த மேல் விவரங்களுக்கு www.desarucoast.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.