வனத்தில் எதிரொலிகள்: வயதிலும் திறனிலும் வேறுபட்டோரை இணைத்த நடனம்

2 mins read
79b0a7bc-ed41-4a17-9f08-477e0898691a
14 முதல் 86 வயது வரையிலான நடனமணிகள் மேடையில் இணைந்தனர். - படம்: காமினி ஹஷ்வின்

வண்ணங்களின் சங்கமமாக ‘வனத்தில் எதிரொலிகள்’ (Echoes in the Wild) என்ற நடனப் படைப்பு, பல்திறன் கொண்டோரின் வனப்பை வெளிப்படுத்தி மனங்களை வசப்படுத்தியது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ (Our Tampinese Hub)  சமூக மையத்தில் மாயா நடன அரங்கம் நவம்பர் 22ல் இந்நிகழ்ச்சியை மேடையேற்றியது.  

14 முதல் 86 வயது வரையிலான கலைஞர்கள் இணைந்து, ஒத்திசைவுடன் நடனங்களைப் படைத்தது, பார்வையாளர்களை வியப்பு கலந்த பரவசத்தில் ஆழ்த்தியது.  

நற்பணி சிங்கை மகளிரும் பல்வேறு திறமைகள் கொண்ட நடனக் கலைஞர்கள் குழுவைச் (Diverse Abilities Dance Collective - DADC) சேர்ந்தவர்களும் நடன இடம்பெற்றனர்.

 ‘வனத்தில் எதிரொலிகள்’ என்ற தலைப்பு, தனிநபர்களின் இயல்பான மலர்ச்சியைக் குறிப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் இடம் அளித்து, மனித மதிப்பான பரிவுமீது இந்தப் படைப்பு கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் கூறினர்.

மொழி, வயது, திறன் ஆகியவற்றில் இருக்கும் வேறுபாடுகளைக் கடந்து எல்லோரையும் ஒருங்கிணைத்து படைத்தப் பல்வேறு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என நடன அமைப்பாளர் மற்றும் கலை இயக்குநர் கவிதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

“இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு பொறுமையும் நேர நிர்வாகமும் தேவை. பயிற்சியின்போதும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவர்க்கும் ஏற்ற வகையில் தொடர்பு செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். 

எல்லோர்க்குமான பயிற்சியை நியாயமாகவும் சுமுகமாகவும் நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி கவிதா, தரத்தைக் கட்டிக்காக்க நடனமணிகளுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகக் கூறினார். 

நற்பணி சிங்கை மகளிருடன் இணைந்த இந்த முயற்சி, பங்குபெறும் பெண்களுக்கு இதமளிக்கும் ஓய்வுநேர நடவடிக்கையாகவும் திகழ்வதாகத் திருவாட்டி கவிதா கூறினார்.

நிகழ்ச்சியின் படைப்புத் தயாரிப்பாளரான 51 வயது இம்ரான் மானவ், வயதானவர்கள், மதியிறுக்கம் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைப்பது தங்களது குழுவின் அணுகுமுறை என்றார்.

 நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு கலைஞர் 46 வயது ஹேமாங் யாதவ், “என்னைப் போல் மேடை நாடகத்தில் அனுபவம் உள்ளவர்கள், நாட்டியத்தில் அனுபவம் உள்ளவர்கள், கவிஞர்கள் ஆகியோர் அனைவரும் கலந்து நிகழ்ச்சியைப் படைப்பது புதிய அனுபவமாக இருந்தது. இது போன்ற தளங்கள் மிகவும் முக்கியம்,” என்றார்.  

குறிப்புச் சொற்கள்