தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திறன் மேம்பாட்டால் பணியில் சிறந்து விளங்கும் செயற்கை நுண்ணறிவாளர்

2 mins read
bd6c2396-418a-4902-9324-c3f819b7630b
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா மாணிக்கமும் அவரின் தந்தையும். - படம்: நெக்ஸ்ட்வெல்த்

திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வோர், வேலையைத் தக்கவைப்பது பற்றி அஞ்ச வேண்டியதில்லை என்பது இன்றைய திறனாளர்களின் கூற்று.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவாட்டி ஜெயா மாணிக்கம், 36, தரவு உரையாசிரியராக (data annotator) பணியாற்றி தம் குறைந்த வருமானக் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டம்பெற்று, தொடக்கத்தில் தரவு உள்ளீட்டுத் (data entry) துறையில் பணியாற்றிய இவர், தற்போது ‘நெக்ஸ்வெல்த்’ (NextWealth) என்ற நிதியியல் ஆலோசனை, ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வங்கிக் கடனுக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் நிதிநிலைமையை ஆராய்வதுடன், அந்நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார்.

கைத்தறி நெசவாளருக்கும் அன்றாடக் கூலித் தொழிலாளிக்கும் பிறந்த திருவாட்டி ஜெயா, தாம் வெகு விரைவில் திறன்களைக் கற்று சொந்தக் காலில் நிற்க முடிவதை எண்ணி மகிழ்கிறார்.

செயற்கை நுண்ணறிவுக்கான தரவு உரையாசிரியராகப் பணியாற்றுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. தரவுத்தொகுப்புகள் உள்ளடக்கிய நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவது இவர்களது வேலையாகும்.

இந்தப் பணியை கிட்டத்தட்ட 70,000 வல்லுநர்கள் முழுநேரமாக அல்லது பகுதி நேரமாகச் செய்து வருவதாக ‘நாஸ்காம்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் துறையின் ஒட்டுமொத்த மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலர் (S$321 மில்லியன்).

சரியான கேள்விகளை எழுப்பி, செயற்கை நுண்ணறிவுப் பொறிக்குக் கற்பிப்பதில் திருவாட்டி ஜெயா வல்லவர் என்று அவருடைய மேற்பார்வையாளர் வெங்கடேஷ் தனபால் குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் சேலம் கிளையில் பணிபுரிவோரில் திருவாட்டி ஜெயா கூர்மதி படைத்தவராகவும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண்பவராகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நல்ல பெயரை வாங்குவதற்குத் திருவாட்டி ஜெயா தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வரும் நற்பழக்கம், திறன் மேம்பாடுதான்!

“உரைவிளக்கம், செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சி ஆகியவை மென்பொருள் நிரலாக்கம் போன்ற திறன்களாகும். அவற்றைப் புதுப்பிப்பது முக்கியம்,” என்பது இவரது கருத்து.

குறிப்புச் சொற்கள்