உற்சாகத்துடன் ஒயிலாட்டம் கற்ற வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
b0da4a2c-bb83-47ae-9ed1-48485328c1a8
ஒயிலாட்டத்தைக் கற்று மகிழ்ந்த ஊழியர்கள். ஞாயிற்றுக்கிழமை இவர்கள் மேடை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளனர். - படம்: இந்துச் சபை 

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒயிலாட்டம் ஆடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு ஊழியர் மையம் ஏற்பாடு செய்கிறது.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினமான ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) இந்நிகழ்ச்சி, பலதரப்பட்ட கொண்டாட்டங்களுடன் டெளன்டவுன் ஈஸ்ட் வட்டாரத்தில் நடைபெறுகிறது.

இதற்கான பயிற்சியை இந்துச் சபையில் கிட்டத்தட்ட 22 பேர் மேற்கொண்டு வருகின்றனர். வண்ணக் கைகுட்டைகளை விரித்து உல்லாசமாகப் பல்வேறு அசைவுகளைச் செய்து பார்த்த அவர்களுக்கு குதூகலம் மேலோங்கியிருந்ததைக் காண முடிந்தது.

உல்லாசமும் உற்சாகமும் உணர்வதுடன் மேடையேறி மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகப் பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றிவரும் பாண்டி சுரேஷுக்கு, 41, இந்த அனுபவம் மிகவும் மாறுப்பட்டிருந்தது. எனினும், பலரது அறிமுகம் பெற்று புதிய நண்பர்களுடன் இணைந்து ஆடுவதில் மகிழ்ச்சி அடைவதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சுரேஷ் கூறினார்.

கடைசியாக பள்ளிப்பருவத்தின்போது மேடையேறியதை நினைவுகூர்ந்த உத்திராபதி மணிவேல், 38, தங்களை சிங்கப்பூரில் மீண்டும் மேடையேற்றியதில் பெருமை அடைவதாகக் கூறினார். 

கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபின்லால், 29, ஓய்வு நாளாக இருந்தாலும் இதில் பங்குபெற்றதற்குச் சிங்கப்பூர் மீதான பற்று காரணம் எனக் கூறினார். 

“அடுத்த சிங்கே அணிவகுப்பிலும் கலந்துகொள்ளவிருக்கும் திரு சுபின், என் தந்தை காலமானபோது எனது சிங்கப்பூர் நிறுவனம் எனக்காகச் செய்த ஏற்பாடுகளை நினைத்து இன்றளவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்நாட்டுக்குத் தொடர்ந்து ஏதேனும் செய்யவேண்டும் என நினைக்கிறேன்,” என்று கூறினார்.

ஒயிலாட்டம் பார்ப்பதைக் காட்டிலும் ஆடுவதற்குச் சவாலான நடனம் என்று மற்றொரு பங்கேற்பாளரான பணிமனைத் துணை நிர்வாகி தங்கேஸ்வரன் குமார், 39, கூறினார். 

ஊழியர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் முயற்சியாக இந்த ஒயிலாட்டப் பயிலரங்கு நடத்தப்பட்டதாக இந்துச் சபை தெரிவித்தது.

“நடன அமைப்பும் பயிற்சியும் வழங்கியவர் திருமதி ரேணுகா, சபையின் செயலாளர். வெளிநாட்டு ஊழிய சகோதர, சகோதரிகளின் கலைத் திறமைகளை வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மற்றவர்களும் சேர்ந்துகொள்ள முன்வரலாம்,” என்று இந்துச் சபையின் தலைவர் டி.ஜோதிநாதன் தெரிவித்தார்.

டிமார்க்கி டெளன்டவுன் ஈஸ்ட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் கொண்டாட்டங்களில் இவர்களது ஆட்டம் அங்கம் வகிக்கும்.

குறிப்புச் சொற்கள்