புதுப்பொலிவு பெற்ற தாம்சன் சமூக மன்றத்தின் தலை தீபாவளி

2 mins read
23947b72-c605-41fb-9356-fe1435b59ac5
வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹவாங் (நடுவில்), நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். - படம்: மேரிமவுண்ட் சமூக மன்றம்

கிளி சோதிடர், பாம்பாட்டி, தமிழர் மளிகைக்கடை காட்சி என அன்றைய சிங்கப்பூர்த் தமிழரின் அன்றாட வாழ்க்கையை தாம்சன் சமூக மன்றக் கொண்டாட்டம் நினைவூட்டியது. 

சனிக்கிழமை (நவம்பர் 15) காலையில் நடைபெற்ற அந்தக் கொண்டாட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சுவைமிகு காலை உணவு பரிமாறப்பட்டது. 

வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹவாங் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

அண்மையில் மேற்கொண்டிருந்த இந்தியப் பயணம் பற்றி குறிப்பிட்ட திருவாட்டி கான், கர்நாடகாவில் சிங்கப்பூர் தொழில்முனைப்பு நிலையத்தின் உருவாக்கம், ஆந்திரப் பிரதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமராவதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் பேசினார். 

“சிங்கப்பூரில் நாம் எல்லாரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை நினைத்து அகமகிழ்வோம். பிற இன, சமயங்களுக்கு மதிப்பு தருகிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதையும் புரிந்து வைத்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார். 

மறுபயனீடு செய்யப்பட்ட இசைவட்டுகளால் ஆகப் பெரிய தேசியக் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டது. 6.2 மீட்டர் அகலமும் 4 மீட்டர் நீளமும் உள்ள அந்தச் சாதனைக் கொடி, எஸ்ஜி60ஆம் ஆண்டையொட்டி உருவாக்கப்பட்டது. 

அத்துடன், மேரிமவுண்ட் நல்லிணக்க வட்டத்தினர், இந்தியர் நற்பணிச் செயற்குழுவினர் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கிய ‘நல்லிணக்கச் சுவை’ (Flavours of Harmony) சமையல் நூல் வெளியிடப்பட்டது. 

ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட சோங் பாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் சிவகுமரன், பல இன மக்களின் ஒன்றுகூடலைக் கண்டு பூரிப்பதாகக் கூறினார். 

புதுப்பொலிவு பெற்ற தாம்சன் சமூக மன்றத்தில் தலை தீபாவளி கொண்டாடுவதில் பெருமை அடைவதாக மேரிமவுண்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் சந்திரமோகன் மருதன் தெரிவித்தார். 

பழைய நினைவுகளில் இனியவற்றை வருகையாளர்கள் அனுபவித்தனர். நம் சமூக உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது என்று திரு சந்திரமோகன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்