ஒளிசிந்தும் ‘ஐ லைட் சிங்கப்பூர் 2026’

ஒளிசிந்தும் ‘ஐ லைட் சிங்கப்பூர் 2026’

3 mins read
2663fe40-4f2b-4c28-92ed-7342e4419e5c
‘ஆர்ச் ஃபிளவர்’ எனப்படும் கலைப்படைப்பு இவ்வாண்டின் ‘ஐ லைட் சிங்கப்பூர் 2026’ ஒளிவிழாவில் இடம்பெறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கண்கவர் கலைப்படைப்புகளுடன் சிங்கப்பூரின் இரவு வானை மின்னும் வண்ணங்களால் நிரப்ப மீண்டும் வந்துவிட்டது ஒளித்திருவிழாவான ‘ஐ லைட் சிங்கப்பூர்’ (i Light Singapore).

ஜூன் 5 முதல் ஜூன் 28 வரை மரினா பே, ராஃபிள்ஸ் பிளேஸ் பகுதிகளில் அரங்கேறும் இந்த விழா இம்முறை ‘இயக்கம்’ என்பதை மையக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ஏற்பாட்டில், யுஓபி வங்கியின் ஆதரவில் நடைபெறும் இந்த விழா அனைவரையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு புதுமைகளைக் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய 14 சிறப்பு ஒளி ஓவியங்கள் இவ்வாண்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.

மக்கள், யோசனைகள், சமூகங்கள் ஆகியவை நகர்ப்புற வெளிகளுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதை இந்தப் படைப்புகள் அழகாக உணர்த்துகின்றன. பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் ஒவ்வோர் ஒளி ஓவியமும் தனித்துவமான கதையைச் சொல்கிறது.

கலைப்படைப்புகள்

பிரெஞ்சுக் கலைஞர் சிரில் லான்சலின் உருவாக்கிய ‘கியூப் கிராஃபிக்ஸ்’, மரினா பே சேண்ட்ஸ் இவென்ட் பிளாசாவில் பிரம்மாண்டமான பிரமிடு வடிவில் காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் அலை அலையான வடிவங்களைக் கொண்டு அசையும் உணர்வைத் தருகிறது.

பிரெஞ்சுக் கலைஞர் சிரில் லான்சலின் உருவாக்கிய ‘கியூப் கிராஃபிக்ஸ்’.
பிரெஞ்சுக் கலைஞர் சிரில் லான்சலின் உருவாக்கிய ‘கியூப் கிராஃபிக்ஸ்’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

கிளிஃபர்ட் சதுக்கத்தில் அமைந்துள்ள தென்கொரியக் கலைஞர் ஜியோன் பியோங் சாமின் ‘பார்பர்ஷாப் வொண்டர்லேண்ட்’, இருநூறு சிகையலங்கார விளக்குத் தூண்களைக் கொண்ட ஒரு கலைப்படைப்பு. பார்வையாளர்கள் நெருங்கி வரும்போது அதனை உணர்ந்து வண்ண ஒளியுடன் அவை சுழலத் தொடங்கும்.

தென்கொரியக் கலைஞர் ஜியோன் பியோங் சாமின் ‘பார்பர்ஷாப் வொண்டர்லேண்ட்’.
தென்கொரியக் கலைஞர் ஜியோன் பியோங் சாமின் ‘பார்பர்ஷாப் வொண்டர்லேண்ட்’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

இயற்கையின் அழகையும் மனித வாழ்வியலையும் பல படைப்புகள் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன.

தைவானைச் சேர்ந்த ‘பெப்பர்கார்ன்ஸ்’ குழுவினர் இவென்ட் சதுக்கத்தில் அமைத்துள்ள ‘பெட்வீன் மவுன்டன்ஸ் அண்ட் சீஸ்’, பல நூற்றாண்டுகளாக மாறிவரும் நிலப்பரப்புகளை ஒளி-ஒலி வாயிலாகக் காட்டுகிறது.

பெப்பர்கார்ன்ஸ் குழுவினரின் ‘பிட்வீன் மவுண்டன்ஸ் அண்ட் சீஸ்’.
பெப்பர்கார்ன்ஸ் குழுவினரின் ‘பிட்வீன் மவுண்டன்ஸ் அண்ட் சீஸ்’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

மிஸ்ட் வாக் பகுதியில் அமைந்துள்ள ‘வேர் தி வைல்ட்ஃபிளவர்ஸ் குரோ’, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் உருவாக்கப்பட்ட அழகான காட்டுப்பூக்களைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களின் தொடுதலுக்கு ஏற்ப இது மெதுவாக அசைந்தாடும்.

மிஸ்ட் வாக் பகுதியில் அமைந்துள்ள ‘வேர் தி வைல்ட்ஃபிளவர்ஸ் குரோ’.
மிஸ்ட் வாக் பகுதியில் அமைந்துள்ள ‘வேர் தி வைல்ட்ஃபிளவர்ஸ் குரோ’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

நகர்ப்புறச் சூழலோடு ஒன்றிணைந்த புதுமையான வடிவமைப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.

இந்தோனீசியாவின் ஓஸ்டுடியோ, டியரிஸ்டா இணைந்து உருவாக்கிய ‘ரெசனோரா’, நகர்ப்புற ஒலிகளை உள்வாங்கி தொங்கும் துணிகளின்மீது ஒளியாகப் பிரதிபலிக்கும் படைப்பாகும்.

ஓஸ்டுடியோ, டியரிஸ்டா இணைந்து உருவாக்கிய ‘ரெசனோரா’.
ஓஸ்டுடியோ, டியரிஸ்டா இணைந்து உருவாக்கிய ‘ரெசனோரா’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

சுவிட்சர்லாந்தின் என்கோர் ஸ்டுடியோ வடிவமைத்த ‘ஸ்லைஸ்டு’ எனும் படைப்பு என்டியுசி நிலையத்தின் அருகே இருண்ட நடைபாதையாக அமைக்கப்பட்டுள்ளது. துளைகள் வழியாக ஊடுருவும் ஒளி பார்வையாளர்களின் அசைவுக்கு ஏற்ப சுவாரசியமான நிழல்களை உருவாக்கும்.

சுவிட்சர்லாந்தின் என்கோர் ஸ்டுடியோ வடிவமைத்த ‘ஸ்லைஸ்டு’.
சுவிட்சர்லாந்தின் என்கோர் ஸ்டுடியோ வடிவமைத்த ‘ஸ்லைஸ்டு’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

சிங்கப்பூரின் டிபி டிசைன், இயோ கெர் சியாங் இணைந்து ரெட் டாட் டிசைன் அரும்பொருளகத்தின் அருகே அமைத்துள்ள ‘செலபிரேஷன் ஆஃப் லைஃப்’ எனும் படைப்பு, பார்வையாளர்களின் முகபாவனைகளை நேரலையாக ஒளிப்பலகைகளில் காட்டி சமூகப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றுகிறது.

டிபி டிசைன், இயோ கெர் சியாங் இணைந்து அமைத்துள்ள ‘செலபிரேஷன் ஆஃப் லைஃப்’.
டிபி டிசைன், இயோ கெர் சியாங் இணைந்து அமைத்துள்ள ‘செலபிரேஷன் ஆஃப் லைஃப்’. - படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஒளி ஓவியங்களைத் தாண்டி சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உணவு, இசை கொண்டாட்டமான ‘கேஸ்ட்ரோபீட்ஸ்’ நாள்தோறும் மாலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை நடைபெறும்.

- படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

ஜூன் 20ஆம் தேதியன்று நடைபெறும் ‘சைலண்ட் டிஸ்கோ பரேட்’ நிகழ்ச்சியில் ‘வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்’ மூலம் இசையைக் கேட்டுக்கொண்டே ஒளி ஓவியங்களுக்கு நடுவே நடனமாடலாம். ஜூன் 27ஆம் தேதி ‘தி புரோமன்டோரி’யில் ‘சப்மெர்ஷன்’ எனப்படும் மின்னணு இசையோடு கூடிய திறந்தவெளி யோகப் பயிற்சி நடைபெறும்.

- படம்: ஐ லைட் சிங்கப்பூர் 2026

‘ஐ லைட் சிங்கப்பூர்’ விழா நாள்தோறும் இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும். விழாவைக் காண அனுமதி இலவசம் என்றாலும் சில குறிப்பிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்புச் சொற்கள்
விழாமரினா பேகலைவிழாகலைகலைஞர்சிங்கப்பூர்