சிங்கப்பூரிலுள்ள இந்திய ஊடகத் துறையைச் சேர்ந்தோரை இந்தியாவிலுள்ள ஊடகத் துறையினருடன் இணைக்க உதவும் இந்தியாவின் ‘வேவ்ஸ் பசார்’ ஆசியத் தொலைக்காட்சி மன்றம் 2025இல் அமைக்கப்பட்டுள்ளது.
குறுநாடகங்கள், கதைசொல்லல், சமூக ஊடகம், ஓடிடி தளங்கள் தொடங்கி, ஆசியாவின் ஊடக வணிகம் வரை பலதுறை நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஆசியத் தொலைக்காட்சி மன்றம் 2025 டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெறும் இம்மன்றத்தில் இந்தியாவின் ‘வேவ்ஸ் பசார்’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வாண்டு அறிமுகம் கண்ட இந்த இணையவழிச் சந்தை திரைப்படங்கள், உயிரோவியம், காட்சி மெருகேற்றம் (visual effects), இசை எனப் பலதுறை வல்லுநர்களை இணைக்கிறது.
ஊடக, பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டதாகக் கூறினார் இந்தியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் துணைப் பொது மேலாளர் பாலாஜி மணி குமரன். வளர்ந்துவரும் ஊடகத் துறையில், வட்டார அளவிலான பங்கேற்பாளர்களுக்கு அனைத்துலக அளவிலான தொடர்புகளை இது ஏற்படுத்தித் தரும் என்று அவர் சொன்னார்.
வர்த்தக இணைப்புகளுடன் கூட்டு உற்பத்தி உடன்பாடுகளை மேற்கொள்ளவும் இது வழிவகுக்கும் என்றார் திரு பாலாஜி.
சிங்கப்பூரிலுள்ள ஊடகத்துறை சார்ந்தோர் சிலரை அம்மன்றத்தில் சந்திக்க நேர்ந்ததைக் குறிப்பிட்ட பாலாஜி, அவர்களது கூர்மையான கண்ணோட்டத்தையும் கவனத்தையும் கண்டு வியப்பதாகக் கூறினார். துறை சார்ந்த தெளிவு அவர்களுக்கு இருப்பதைச் சுட்டிய அவர், இந்திய வல்லுநர்களுடன் அவர்களுக்கு இணைய இந்தக் கண்காட்சி பாலமாக அமைவதில் மகிழ்ச்சியடைவதாகவும் சொன்னார்.
இந்திய ஊடகத்துறையில் மாணவர்கள் தொடங்கி பலருக்கும் பல்வேறு வாய்ப்புகளை இத்திட்டம் ஏற்படுத்தித் தருவதைச் சுட்டிய அவர், சிங்கப்பூர் இந்திய ஊடக நண்பர்கள் தங்கள் தளத்தில் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆசியத் தொலைக்காட்சி மன்றத்தில் உலகெங்குமிருந்து வந்துள்ள ஏறத்தாழ 40 வல்லுநர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

