மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோர்க்கு ஒரு நற்செய்தி. பயணங்களுக்கு முன்பதிவு செய்பவர்கள் சிறப்புச் சலுகைகளைப் பெறவுள்ளனர்.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இயங்கிவரும் இணைய விற்பனைத் தளமான ‘ஷாப்பேக்’, சிங்கப்பூர் பயணத்துறை கழகத்துடன் இணைந்து சலுகைத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வோர் கட்டுப்படியான விலையில் செய்ய ஷாப்பேக் தளம் உதவுகிறது.
‘சியோக் ஜாலான், சியோக் லாகி கேஷ்பேக்’ என்ற இந்தச் சலுகைத் திட்டத்தின்படி, ஷாப்பேக்கில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் செலுத்திய பணத்தில் சிறிதளவைத் திரும்பப் பெறுவர்.
வாடிக்கையாளர்களை ஷாப்பேக்கில் மேலும் வாங்குவதற்கு ஊக்குவிக்கும் உத்தியாக இது உள்ளது.
ஹோட்டல்கள், சுற்றுலாத் தலங்கள், சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட பயண அனுபவங்களுக்கு ஷாப்பேக் மூலம் பதிவுசெய்வோர், தாங்கள் செலுத்திய கட்டணத்திலிருந்து கூடுதலான தொகையைத் திரும்பப் பெறலாம்.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்குச் சில தள்ளுபடிகளுக்கும் பரிசுகளுக்கும் அவர்கள் தகுதிபெறுவர்.
இந்தக் கட்டணச் சலுகைகள் நவம்பர் 28 முதல் மார்ச் 2026 வரை நடப்பில் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
‘குலுக்’, ‘டிராவலோகா’, ‘ஐ எச்ஜி ஹோட்டல்’, ‘புக்கிங் டாட் காம்’ ஆகிய வெளிநாட்டுப் பயணச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தச் சலுகையை வழங்க இணைந்துள்ளன.
சிங்கப்பூரில் சுற்றுப்பயணச் சேவைகளுக்கு இந்தத் தளத்தின்வழி கட்டணம் செலுத்துபவர்கள், அவர்கள் செலுத்திய தொகையில் 12 விழுக்காடு வரை திரும்பப் பெற முடியும்.
எடுத்துக்காட்டாக, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ‘குலுக்’ தளத்தில் நுழைவுச்சீட்டுகளை வாங்குபவர்கள், கட்டணத்தில் 9.5 விழுக்காட்டைத் திரும்பப் பெறலாம்.
‘டிராவலோகா’ தளம் வழியாக கரையோரப் பூந்தோட்டங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்குவோர், கட்டணத்தில் 9 விழுக்காட்டைத் திரும்பப் பெற இயலும்.
இந்தப் பொது மற்றும் தனியார் துறை புத்தாக்கம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் சுற்றுலாத் தலைமைப் பண்பையும் ஷாப்பேக்கின் செயல்திறன் நிபுணத்துவத்தையும் மேம்படுத்துகிறது.
பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான இந்தப் புத்தாக்க முயற்சி, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமைப் பண்பை எடுத்துக்காட்டுவதாக இந்தச் சலுகை பற்றிய செய்தியாளர் அறிக்கை குறிப்பிடுகிறது.
ஷாப்பேக் வழியாக ஏறத்தாழ 8.5 மில்லியன் மலேசியப் பயணிகளைச் சென்றடைய சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் முற்படுகிறது.

