உள்ளூர் கட்டடக்கலை நிறுவனமான ‘ஆர்எஸ்பி’, அபுதாபியில் இருக்கும் இந்துக் கோவிலுக்கான கலாசார வளாகத்தின் கட்டடக் கலைத் திட்டத்தில் பங்களித்துள்ளது.
மத்திய கிழக்கின் முதல் இந்துக் கற்கோவிலான ‘பாப்ஸ் இந்து மந்திர்’ சென்றாண்டு ஜனவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மேற்கு ஆசியாவின் ஆகப் பெரிய இந்துக் கோவில் என்ற பெருமையும் இதைச் சேரும்.
கோவிலின் தொடக்க விழாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று நடத்தி வைத்தார். நிறுவனத்தில் பணியாற்றும் கட்டடக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆறாண்டுகளுக்கு முன்னர் இத்திட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
முற்றங்கள், கண்காட்சி மண்டபங்கள், பொது அரங்கம் எனப் பல்வேறு நவீன வசதிகள் கொண்டுள்ள இந்தக் கோவிலானது 27 ஏக்கர் நிலத்தில், பாலைவனச் சூழலில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் வடக்கு ராஜஸ்தானில் இருக்கும் இளஞ்சிவப்பு மணற்கல், இத்தாலி பளிங்கு ஆகியவற்றை வைத்துக் கட்டப்பட்டது. 108 அடி உயரம், 262 அடி நீளம், 180 அடி அகலம் கொண்டுள்ளது இக்கோவில்.
பல நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் கட்டுமானத்திற்காக 690,000 மணி நேரத்திற்கும் மேல் அர்பணித்துள்ளனர். 3,000 கொத்தனார்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவைப் பறைசாற்றும் வண்ணம் சமய நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது இக்கோவில்.
ஆர்எஸ்பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், படைப்பு இயக்குநருமான மைக்கேல் மகில், 49, இத்திட்டத்தில் தாம் ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டடக் கலைஞராக இருந்துவரும் அவர், முதல் முறையாக சமயம் சார்ந்த கட்டடத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இத்திட்டம் வெற்றிகரமாக உருவானதற்கு தம்முடன் ஒத்துழைத்த துறவிகளைப் பாராட்டிய அவர், தாம் ஓர் இந்து இல்லை என்பதால் இந்து சமயத்தின் பின்புலங்களை அறிந்துகொள்ள துறவிகள் தமக்குப் பேராதரவாக இருந்ததாகவும் சொன்னார்.
இந்தியாவில் குஜராத், டெல்லி, பின்னர் லண்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சில கோவில்களைப் பார்வையிட்டு அதிலிருந்து கட்டிடத் திட்டத்திற்கு தேவைப்படும் வடிவமைப்புகளைத் தழுவியதாக மைக்கேல் கூறினார்.
“எனக்கு இந்து சமயம் பற்றி ஒன்றும் தெரியாது. என்னுடன் கைகோர்த்த துறவிகள் எனக்கு பெரிதளவில் உதவினார்கள். அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாங்கள் வடிவமைப்புகளை வரிவடிவம் செய்தோம்,” என்றார் மைக்கேல்.
சுற்றியுள்ள பாலைவனத்துடன் பின்னி பிணைந்துள்ளது கோவிலின் கட்டடக்கலை வடிவமைப்பு. தொன்மையான இந்தியக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில் பல அர்த்தங்களும், சித்தாந்தங்களும் அடங்கியுள்ளன.
இந்து சமயத்தின் தொன்மையான கூறுகளுடன் வேரூன்றி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்து வேதங்களிலும், புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள அம்சங்கள் கோவிலின் கலாசார வளாகத்தின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக மைக்கேல் தெரிவித்தார்.