எந்த வயதிலும் எந்நிலையிலும் புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் திரு மகேந்திரன் பசுபதி.
தமது 73வயது வயதில், ‘திடல் உருட்டுப்பந்து’ (Lawn bowling) எனும் விளையாட்டைக் கற்ற அவர், அதில் பல சிகரங்களைத் தொட்டுள்ளார்.
இவர் 2022ல் உடற்குறையுள்ளோருக்கான ஆசிய உருட்டுப்பந்துப் போட்டிகளில் மூன்றாம் நிலையிலும், 2023 தாய்லாந்தில் நடந்த உடற்குறையுள்ளோருக்கான திடல் உருட்டுப்பந்து அனைத்துலகப் போட்டிகளில் இரண்டாம் நிலையிலும் வந்தார்.
அதன்பின் 2023ல் ஹாங்சோ உடற்குறையுள்ளோருக்கான ஆசியப் போட்டிகளில் பங்கேற்ற இவர், 2024ல் உடற்குறையுள்ளோருக்கான நான்காவது ஆசிய உருட்டுப்பந்துப் போட்டியில் வெள்ளி வென்றார்.
உடற்குறையுள்ளோர் பிரிவில் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கு இரண்டாவது ஆண்டாக முன்மொழியப்பட்டார் திரு மகேந்திரன். நவம்பர் 20ஆம் தேதி நடந்த விருதுவிழாவில் அவர் வெற்றிபெறாவிட்டாலும், அவரது அயரா உழைப்புக்கு இந்தப் பரிந்துரை ஓர் அங்கீகாரம்.
திரு மகேந்திரனைப் பார்க்கும் யாருக்கும் அவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது தெரியாது. ஏனெனில், கைத்தடியைக்கூடப் பயன்படுத்தாமல் பார்ப்பதற்கு சராசரி மனிதரைப் போலத்தான் இருப்பார்.
ஆனால், உண்மையில் அவரால் தம்மைச் சுற்றி நிற்பவர்களின் முகங்களை அடையாளங்காண முடிவதில்லை. அவரவர் போடும் உடைகளைக் கொண்டே அடையாளம் காண்கிறார்.
“என் மனைவியைக்கூட, அவரது குரல், உடையின் உதவியுடன்தான் அடையாளம் காண்கிறேன்,” என்கிறார் திரு மகேந்திரன், 78.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அதற்காக இவர் வருந்துவது இல்லை; எப்போதும் மலர்ந்த முகத்துடன் பிறருடன் பேசிப் பழகுகிறார். குறிப்பாக, விளையாட்டுமீது அவருக்கு இளவயதிலிருந்து இருந்த ஈர்ப்பு, கடந்த சில ஆண்டுகளாகச் செயல்வடிவம் பெற்றுள்ளது.
‘திடல் உருட்டுப்பந்து’ விளையாட்டில், விளையாட்டாளர்கள் பந்தை, குறியை நோக்கி உருட்டுவர். யாருடைய பந்து, குறிக்கு ஆக அருகில் சென்று நிற்கிறதோ அவரே வெற்றியாளர். பார்வைக் குறைபாடுடையோருக்கு வழிகாட்டி ஒருவர் ‘கண்’களாக இயங்குவார். திரு மகேந்திரனின் தம்பி தற்போது அவருக்குக் ‘கண்’ணாக இருந்து உதவுகிறார்; 2024ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிக்குக்கூட அவருடன் சென்றார்.
திரு மகேந்திரனின் பார்வைப் பிரிவு B3, அதாவது, 20 டிகிரிக்கும் குறைவான பார்வைத்திறன் உள்ளது.
இடையில் திடீரென மங்கிய பார்வைத்திறன்
தமது 18 வயதிலிருந்து காவல்துறையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றியவர் திரு மகேந்திரன். பணியில் சேர்ந்தபோது அவருக்குப் பார்வையில் எவ்விதக் குறைபாடும் இல்லை.
ஆனால் திடீரென, அவரது 30களில் பார்வை மோசமடையத் தொடங்கியது.
“கார் ஓட்டுவேன். ஆனால், மற்ற வாகனங்களின் பதிவெண் தெளிவாகத் தெரியாது. இது என்ன நோய் என மருத்துவர்களாலும் கண்டறிய முடியவில்லை. பிறவியிலிருந்தே எனக்கு உள்ள குறைபாடு எனக் கூறினர்,” என்றார் திரு மகேந்திரன்.
பின்னர் காவல்துறையிலிருந்து விலகி, குன்றிய பார்வையுடன் வாழ்வை நடத்தக் கற்றுக்கொண்ட இவர், வீட்டு விற்பனை முகவராகத் துறைமாறினார்.
சிறுவயது நாட்டம், இலக்கை நோக்கிய போராட்டம்
சிறுவயதிலிருந்து ஓட்டப்பந்தயம், பூப்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் எனப் பல விளையாட்டுகளையும் விளையாடிவந்த திரு மகேந்திரன், தமது கண்பார்வை மங்க மங்க அவற்றை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குமுன் நண்பர்கள் சிலர் அவரைக் கடல்நாகப் படகோட்டத்திற்கு அறிமுகப்படுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தார் அதற்கு அவரை அனுப்ப அஞ்சினர். அப்போதுதான் ரிக்சன் என்ற நண்பர் அவருக்கு திடல் உருட்டுபந்தை அறிமுகப்படுத்தினார்.
தொடக்கத்தில், திரு மகேந்திரன் தாமாக விளையாடத் தொடங்கினார்; பின்பு, வாரம் இருமுறை உடற்குறையுள்ளோருடன் காலாங்கிலும் பயிற்சிசெய்தார்.
தம் வெற்றிகளுக்குக் குடும்பத்தினர் முக்கியக் காரணம் என்கிறார் திரு மகேந்திரன். மனைவி ஜெயலட்சுமிக்கும் அவருக்கும் இடையேயான பந்தம், உயர்நிலைப் பருவத்திலிருந்து தொடங்கியது.
திரு மகேந்திரனின் பார்வைத்திறன் மங்கத் தொடங்கியதும் அவருக்குப் பக்கபலமாக நின்றார் திருவாட்டி ஜெயலட்சுமி. கணவர் ‘பேராபோல்ஸ் சிங்கப்பூர்’ (Parabowls Singapore) அமைப்பில் சேர்ந்த புதிதில் அவரைப் பயிற்சிகளுக்கு அழைத்துச் சென்றார்; 2023 முதல் அமைப்பின் செயற்குழுவிலும் இணைந்து தொண்டாற்றி வருகிறார்.
திரு மகேந்திரன் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் ஒரு நம்பிக்கைத் தூணாக, திருவாட்டி ஜெயலட்சுமி தமது சொந்த செலவில் அவருடன் செல்கிறார். அவருடன், தன் மகள் குடும்பத்தினரும் சகோதரர்களும் பெரிய ஆதரவாளர்கள் என்கிறார் திரு மகேந்திரன்.
தாம் வெல்லும் பதக்கங்களையும் தாண்டி, பிறரது உள்ளங்களிலும் ‘எதையும் சாதிக்கலாம்’ எனும் நம்பிக்கையையும் அவர் விதைக்கிறார்.
விளையாட்டாளர்களுக்கு அரணாக உள்ள தொண்டூழியர்கள்
உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு விருதுகளில் தொண்டூழியர்கள் சிலருக்கும் விருதுகள் கிடைத்தன.
சிட்டிபேங்க் வங்கியில் பணிபுரிந்தபோது நிறுவனத்தின் சமூகநோக்கு முயற்சியுடன் தொடங்கியது திரு துருத்தி நீலகண்டன் பேபியின் தொண்டூழியப் பயணம். நாளடைவில் சமூகப் பயிற்றுவிப்பாளராகச் சான்றிதழும் பெற்ற அவர், கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான மிதிவண்டியோட்டக் கூட்டமைப்பில் தொண்டூழியராக இருந்துவருகிறார். திரு நீலகண்டனின் இரு மகள்களும் அவருடன் இணைந்து தொண்டாற்றுகின்றனர். அவர், இவ்வாண்டுக்கான தலைசிறந்த சமூகப் பயிற்றுவிப்பாளர் விருதுக்கு முன்மொழியப்பட்டார்.
பின்னப்பு ரனதீப் ரெட்டி, 43, முதசானி ரமாதேவி, 37 இணையரும் அவர்களின் மகள் பின்னப்பு அனாஹி ரெட்டியும் இவ்வாண்டுக்கான தலைசிறந்த தொண்டூழியர் (குழு) விருதுக்கு முன்மொழியப்பட்டனர்.
2021ல் சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு மன்றம் (எஸ்டிஎஸ்சி) வழங்கிய தொண்டூழிய வாய்ப்புடன் தொடங்கியது திரு ரனதீப்பின் பயணம். அவரது மனைவி, உடற்குறையுள்ளோரையும் உள்ளடக்கும் தேசிய விளையாட்டுகளில் நடுவராக உள்ளார். விளையாட்டுகளுக்கு மகளையும் அழைத்துவருவதால் அவருக்கும் அதில் ஈடுபாடு வந்துள்ளது.
பார்வைக் குறைபாடு உடையோருக்கான ‘கோல்பால்’ விளையாட்டில் கண்ணைக் கட்டி விளையாடியது தனக்கு வியப்பூட்டிய அனுபவமாக இருந்தது என்றார் ரனதீப். “பந்து எந்தத் திசையிலிருந்து வருகிறது எனத் துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு அவர்களின் செவித்திறன் கூர்மையாக உள்ளது. அவர்களின் திறனை நம்முடன் ஒப்பிடமுடியாது,” என்றார் அவர்.

