தொண்ணூறுகளில் பிறந்த நான், வழக்கமாக பிரியாணியைச் சுவைப்பதற்கு முன்பு அதனைப் புகைப்படமாக எடுத்துக்கொள்வேன்.
ஆனால், இந்த முறை நான் எந்தப் படமும் எடுக்கப்போவதில்லை என உறுதி பூண்டிருந்தேன்.
பூப்போல மென்மையான, பாஸ்மதி சோற்றுக்குள் பொதிந்து சற்றே தலைதூக்கிய இறைச்சி, அவித்த முட்டையுடன் வண்ணக்கலவையாகக் காட்சியளித்த தட்டைக் கண்டபோது என் உணர்வுகள் ஊசலாடின.
பணி, பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் திறன்பேசிக்குள் அடக்கப் பழகிய நானும் என்னுடன் வந்த சக ஊழியரும் எங்கள் கைப்பேசிகளைப் புறம் தள்ளி உணவில் கவனம் செலுத்த வேண்டுமென முடிவெடுத்தோம்.
உணவிலும், ஒருவருக்கொருவர் பகிர வேண்டிய உணர்விலும் கவனத்தைக் குவிக்க, ‘திறன்பேசியில்லா உணவு நேரம்’ என்ற நூதனமானச் சவாலை ‘மிஸ்டர் பிரியாணி’ உணவகம் நடத்தியது.
ஹைதராபாத்-பாணி பிரியாணிக்குப் பெயர்போன மிஸ்டர் பிரியாணி உணவகம், 11 சந்தர் ரோட்டில் அமைந்துள்ளது.
உணவருந்தும் நேரத்தில் கைப்பேசியை ஒருமுறைகூட பயன்படுத்தாமல் இருந்த வாடிக்கையாளர்கள், தங்களது உணவு விலையில் 15% தள்ளுபடியைப் பெறலாம்.
இச்சலுகை, நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
2017 முதல் உணவகத்தை நடத்திவரும் மிஸ்டர் பிரியாணி உணவகத்தின் நிறுவனரான திரு கோவிந்தா ராஜன், 56, தாம் கைப்பேசியில் அளவுக்கு மீறி நேரம் செலவழிப்பதாக மனைவி குறைகூறியதே இந்த இயக்கத்தின் தூண்டுதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
“எனக்கு வாடிக்கையாளர்களின் அழைப்புகள், முன்பதிவுகள், குறுஞ்செய்திகள் அனைத்தும் நேரடியாக வரும். வீட்டுக்குப் போன பிறகும் அந்தப் பழக்கம் என்னைப் பின்தொடரும். இறுதியில், பழக்கத்தை மாற்ற முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.
ஆரோக்கியமற்ற பழக்கத்தைத் தமது அன்புக்குரியவர்களுக்காகக் கைவிட எண்ணியதாக நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு கோவிந்தா கூறினார்.
மக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த உணவக வர்த்தகத்தில் கவனச் சிதறல் இன்றி ஒருவரோடு ஒருவர் உறவாட வைக்கும் சவாலை விடுப்பது அர்த்தமுள்ளதாய் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சவாலின் விதிமுறைகள் எளிமையானவை.
முதலில், விரும்பிய உணவை வாங்கத் தொடங்கிய பிறகு வாடிக்கையாளர்கள் விரும்பினால் கைப்பேசியை அடைத்துவிடலாம். அல்லது அதன் திரையை மூடி மேசையில் வைத்துவிடலாம். உணவைச் சாப்பிட்டு முடிக்கும் வரை அதைத் தொடக்கூடாது.
வெற்றிகரமாகச் சவாலை முடித்தால், மொத்த கட்டணத்தில் 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.
நானும் எனது சக ஊழியரும் ஒரு கோழி ‘தம்’ பிரியாணியும், இரண்டு எலுமிச்சைச் சாறு பானங்களையும் தெரிவு செய்தோம். மொத்தச் செலவு 32.40 வெள்ளி ஆனது. ஆனால் சவாலை வெற்றிகரமாக முடித்ததால் 28.20 வெள்ளி மட்டுமே செலவு செய்தோம்.
இச்சவால், எங்களுக்கு எளிதன்று. உணவகத்தில் சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தோம். முதல் 15 நிமிடங்களே வழக்கத்தைக் காட்டிலும் நீண்ட நேரமாகத் தோன்றியது. கையில் கைத்தொலைபேசி இல்லாமல் சாப்பிடுவதே எங்களுக்குச் சிரமமாக இருந்தது.
ஆனால் என்னுடன் வந்திருந்தவருடன் கூடுதல் விழிப்புடன் உரையாட முடிவதைக் கவனித்தேன். இருப்பினும், இந்த அனுபவத்தை எல்லோரும் விரும்புவதில்லை என்பது வாடிக்கையாளர்கள் சிலரது கருத்துகளிலிருந்து தெரிகிறது.
“இங்குள்ள சாப்பாடு சுவையாக இருக்கும், வாடிக்கையாளர் சேவையும் நன்றாக இருக்கும். நானும் என் குடும்பத்தினரும் இங்கு அடிக்கடி வருவோம். ஆனால் நான் மட்டும் இந்தச் சவாலில் பங்குபெற மாட்டேன். என்னால் என் கைத்தொலைபேசியில் வரும் அறிவிப்புகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது,” என்றார் தளவாட நிறுவனத்தின் இயக்குநரும் நீண்டநாள் வாடிக்கையாளருமான சுரேஷ் இளங்கோவன், 33.

