வெளிநாடுகளுக்குச் செல்லாமல் சிங்கப்பூரிலேயே தெளிந்த நீரில் மிதந்தபடி கடல்வாழ் உயிரினங்களை அருகில் கண்டு ரசிப்பதற்கான வாய்ப்பை ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகம் இப்போது வழங்குகிறது.
அனைத்துலக ‘பாடி’ (PADI) அமைப்பின் ‘5-நட்சத்திரப் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டு முக்குளிப்பு உல்லாசத்தலம்’ (PADI 5-Star Instructor Development Dive Resort) என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இக்காட்சியகம், ‘பாடி டிஸ்கவர் ஸ்நோர்க்கெலிங்’ (PADI Discover Snorkelling) எனும் புதிய நீர்மேற்பரப்பு அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல்வாழினக் காட்சியகத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள நீர்நிலையில் மிதந்தபடி ஸ்நோர்க்கெலிங் செய்யும் சிங்கப்பூரின் ஒரே திட்டம் இதுவாகும்.
முன் அனுபவமின்றி கடல்வாழ் உயிரினங்களைக் காணலாம்
முக்குளிப்பிலோ நீச்சலிலோ முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்கலாம்.
10 வயதை எட்டிய சிறாரும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகக் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுகளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
18 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்ட பிரம்மாண்டமான மேற்பரப்பில் மிதந்தபடி, நீருக்கடியில் நீந்தித் திரியும் 120க்கும் மேற்பட்ட அரிய கடல்வாழ் இனங்களைக் காணலாம்.
மான்டா ரே திருக்கை மீன்கள், சுத்தியல் போன்ற தலையைக் கொண்ட சுறாக்கள், வரிக்குதிரை போன்ற சுறாக்கள், பெரிய குரூப்பர் மீன்கள் ஆகியவை அருகில் நீந்திச் செல்வதைக் காண்பது தனித்துவமான அனுபவம்.
பங்கேற்பாளர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளும் மிதவை உடைகளும் வழங்கப்படும். தகுதிபெற்ற பயிற்றுவிப்பாளர்கள் நீரில் சுவாசிக்கும் முறையையும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் கற்றுக்கொள்வோருக்கு விளக்குவர்.
அச்சத்தைக் கடந்து தன்னம்பிக்கை பெற உதவும் பயிற்சி
கடல்வாழினக் காட்சியகத்தில் முக்குளிப்பு வல்லுநராகப் பணியாற்றும் 46 வயது ஜோயல் ராஜேஷ் பிரையன் திட்டம் குறித்துத் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிறுவயதில் தந்தை கூறிய படகுப் பயணக் கதைகளைக் கேட்டு வளர்ந்ததும் தேசியச் சேவையின்போது கடற்படையில் பணியாற்றியதும் கடலின் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. இந்தோனேசியாவின் பாலித் தீவில் முதன்முறையாக முக்குளிப்பில் ஈடுபட்ட பிறகு, கடல்வாழ் உயிரினங்கள் மீதான ஆர்வத்தைப் பிறருடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இத்துறையைத் தேர்ந்தெடுத்தார்.
பயிற்றுவிப்பாளராகத் தமது அனுபவத்தைப் பற்றிப் பேசிய திரு ஜோயல், தொடக்கத்தில் தண்ணீரைக் கண்டு அஞ்சிய பலருக்குப் பயிற்சியளித்துள்ளதாகக் கூறினார். அவர்கள் தங்களது அச்சத்தைக் கடந்து, சான்றிதழ் பெற்ற முக்குளிப்பாளர்களாக உயர்வதைக் காண்பதே தமக்குப் பெரும் மனநிறைவைத் தருவதாக அவர் தெரிவித்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட சூழல் தரும் பாதுகாப்பு
கடலில் எதிர்பாராத நீரோட்டம் போன்ற சவால்கள் இருக்கக்கூடும். அவற்றுடன் ஒப்பிடுகையில், காட்சியகத்தின் கட்டுப்படுத்தப்பட்ட சூழல், பயிற்சிக்கு வருவோரில் ஆரம்பக் கட்ட நிலையில் உள்ளோர்க்கு ஏற்றதாய் இருப்பதாகத் திரு ஜோயல் கூறினார்.
“பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிற்சி பெறுவது இங்குள்ள மிகப்பெரிய சாதகம். கடலில் அலைகளால் அடித்துச் செல்லப்படுவோமோ வழி தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சமின்றி, ஆரம்பக் கட்டத்தில் இருப்போர்கூடப் பயிற்சியிலும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிப்பதிலும் கவனம் செலுத்தலாம்,” என்றார் அவர்.
முக்குளிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு உகந்த நிலையிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“ஒரே இரவில் தேர்ந்த முக்குளிப்பாளராகிவிட முடியாது. சிறிய அளவில் தொடங்கி, ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தகுதிபெற்ற நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் படிப்படியாகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதே சிறந்தது,” என்றார் திரு ஜோயல்.
