தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிராங்கூன் கதைகள் சொல்லும் திறந்த புத்தகம்

2 mins read
25ba552c-f1ae-4b66-9242-c4c097f036f8
சிராங்கூன் வட்டாரத்தின் தனித்துவத்தைப் பேசும் பெரிய புத்தகம். - படம்: மக்கள் கழகம் - ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’

சிராங்கூன் வட்டாரத்தின் அக்கம்பக்கக் கதைகள், அன்றாடக் காட்சிகள், தனித்துவங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் ‘சிராங்கூன் கதைகள்’ எனும் தலைப்பில் ஒரு பெரிய கலைப் படைப்பைக் குடியிருப்பாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் உள்ளூர் வரைகலைஞரான 46 வயது அம்ருத்தா கலைச்செல்வன்.

பத்தாண்டுகளாக ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’ விழாவில் இவ்வாண்டு தாம் வசிக்கும் சிராங்கூன் வட்டாரக் கதைகளைக் கலைப்படைப்பாக்கும் வாய்ப்புக் கிட்டியதில் மகிழ்ச்சியடைவதாகச் சொன்னார் அம்ருத்தா.

தொடக்கத்தில் பிள்ளைப் பராமரிப்பு ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடந்த 11 ஆண்டுகளாக கலைத் துறையில் பயணித்து வருகிறார்.

கலைப் படைப்பில் பங்காற்றிய குடியிருப்பாளர்களுடன் அம்ருத்தா.
கலைப் படைப்பில் பங்காற்றிய குடியிருப்பாளர்களுடன் அம்ருத்தா. - படம்: மக்கள் கழகம் - ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’ விழாவில் பணியாற்றிவரும் இவர், “இவ்வாண்டின் படைப்பு சிறப்புமிக்கது,” என்றார்.

வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் ஏறத்தாழ 40 பேருடன் இணைந்து இப்படைப்பில் பணியாற்றியதாகச் சொன்ன அவர், “மூத்தோரின் ஆர்வமும் பங்களிப்பும் என்னை வியக்க வைத்தன,” என்றார்.

தைல வண்ணம் (ஆயில் பெயின்டிங்), ‘அக்ரிலிக்’ வண்ணம் ஆகியவற்றைக்கொண்டு கலைப்படைப்பை உருவாக்கியதாகவும், பங்கேற்றோரில் 87 வயது குடியிருப்பாளர் ஒருவரின் ஈடுபாடு தம்மை மேலும் ஊக்கப்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.

சிராங்கூன் வட்டாரத் தனித்துவத்தைப் பேசும் பெரிய புத்தகத்தைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்.
சிராங்கூன் வட்டாரத் தனித்துவத்தைப் பேசும் பெரிய புத்தகத்தைக் கண்டு ரசிக்கும் பொதுமக்கள். - படம்: மக்கள் கழகம் - ‘பே‌‌ஷன் ஆர்ட்ஸ்’

வட்டாரத்தின் தனித்துவமான செல்லப்பிராணிகள், பழைமையான கட்டடங்கள், அஞ்சல் அலுவலகம், பாரம்பரியக் கடைவீடுகள், வீவக கட்டடங்கள், ‘சிராங்கூன் ஸ்டேடியம்’ என அனைத்தையும் உள்ளடக்கிய ஆகப்பெரிய திறந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அம்ருத்தா.

பழைய, பயன்படுத்தப்பட்ட போத்தல்களால் செய்யப்பட்ட மலர்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

“இந்தப் பயணத்தின் மூலம் புதிய நண்பர் குழுக்கள் உருவானதும் பலரிடம் பழங்கதைகள் கேட்டறிந்ததும் எனக்கு மாறுபட்ட அனுபவத்தை அளித்தன,” என்றார் அம்ருத்தா.

குறிப்புச் சொற்கள்