பூக்குழி: சமூகப் புழுக்கம்

சிவகுமார்

முதன்முறையாக தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்று, பெருமைமிகு அனைத்துலக ‘புக்கர்’ பரிசுக்கான முதற்கட்ட, நீள்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

‘பையர்’ என்ற அந்த ஆங்கில நூலின் மூலநூல், தமிழின் முன்னணி எழுத்தாளுமைகளில் ஒருவராகத் திகழும் திரு பெருமாள் முருகனின் ‘பூக்குழி’. ஆங்கில மொழிபெயர்ப்பின் ஆசிரியர் திரு அனிருத்தன் வாசுதேவன்.

2013ஆம் ஆண்டில் பதினாறு வாரங்களாக கல்கி இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் ஆசிரியர் அதனைச் சற்று விரிவாக்கி, செம்மைப்படுத்தித் தர, காலச்சுவடு பதிப்பகம் நாவலாக வெளியிட்டது.

அதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முந்திய காலகட்டம் கதைக்காலம்.

இருவேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதல் மணம் புரிந்து, அதன்பின் சமூகத்திடம் சிக்கி அல்லலுறுவதே நாவலின் கதைக்களம்.

ஆண் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன்; பொட்டல் காட்டில், பாறைமேல் குடிசையில் வளர்ந்தவன். பெண் நகரத்தில் பிறந்தவள்; ஓட்டு வீட்டில் வளர்ந்தவள். ஆண் தந்தையை இழந்தவன்; பெண் தாயை இழந்தவள். ஆண் கறுப்பு; பெண் சிவப்பு. 

சாதி மட்டுமின்றி, இப்படி எதிரெதிர் அம்சங்கள் பல இருந்தாலும் மனங்கள் மட்டும் ஒன்றுபட்டுப் போகின்றன. இருவர்க்கிடையில் சொற்பழக்கம் குறைவென்றபோதும் காதல் வலுப்படுகிறது.

‘நெடுங்காலம் பழகியவன்போல அவள் அசைவுகளுக்கான அர்த்தங்களை புரிந்துகொள்ள அவனால் முடிவதை ஏற்கெனவே உணர்ந்திருந்தாள்’ என்ற வாக்கியமே அவர்களது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்ளும் அவர்களுக்கு ஆண் வீட்டில் கடும் எதிர்ப்பு. பெண் வீட்டிலும் கைகழுவிவிடுகின்றனர்.

அத்துடன், பெண்ணுக்குப் புதிய ஊர், புதிய முகங்கள், கேட்பதற்குப் புதிய, புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருக்கும் வட்டார மொழி; உணவும் தொடக்கத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், திருமணமானதும், ‘அவசரப்பட்டுவிட்டோமோ?’ எனக் காதலர்களிடம் எட்டிப் பார்க்கும் மனச் சஞ்சலத்தையும் ஆசிரியர் பதிவுசெய்கிறார்.

பகலில் சுட்டெரிக்கும் வெயில், அச்சூட்டை உள்வாங்கி இரவில் வெம்மையை வெளிவிடும் பாறை, மாமியாரின் ஏளனப் பேச்சு, சொல்லாடல்கள் என நாவல் முழுவதும் அனல் தகிக்கிறது. அப்புழுக்கத்தைத் தாங்க முடியாமல் குடிசைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறாள் கதைநாயகி.

பெரும்பாலும் கறுத்த பெண்களையே கண்ட உள்ளூர் ஆண்களுக்கு வெளுத்த தோல்காரியைக் கண்டதும் அவளைத் தொட்டுவிடத் துடிக்கும் சபலம்; தங்களில் பலர் தூண்டில் போட்டும் சிக்காதவனைத் தன் வலையில் விழச்செய்ததால் உள்ளூர்ப் பெண்களின் பொறாமை.

இத்தனை சிக்கல்கள் இருந்தும், எதையுமே முடியாது என்று சொல்லாமல் ‘செய்துவிடலாம்’, ‘நான்தான் இனி உனக்கு எல்லாம்’ என்ற கணவனின் சொற்களைப் பிடிமானமாகக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்று கதைநாயகி நம்புகிறாள்.

இத்தனை போராட்டங்களுக்கு இடையில் காதல் மணம்புரிந்த இணையரின் நிலை என்னவானது என்பதை ஒரு தெளிவில்லாத, ஆனால் நம்பிக்கையான முடிவோடு நாவலை நிறைவுசெய்கிறார் ஆசிரியர். 

நூலில் காதல் இயல்பாக இழையோடுகிறது.   சாதிப்பற்றை, வெறியை வெகுண்டு எழுந்து சாடாவிடினும் கதைமாந்தர்களின் செயல்களாலேயே அதன் இழிவை ஆசிரியர் உணர்த்திவிடுகிறார்.

“சாதி எதற்கும் உதவாத வெற்றுக்கருத்து. அது கண்ணுக்குத் தெரியக்கூடிய பருப்பொருளும் கிடையாது. ஆனால், கொலைசெய்யும் அளவிற்கு அதன்மீது பிடிமானம் கொண்டு அலைவது என்னை வியப்புறவும் சலிப்புறவும் செய்கிறது,” என்று மனம் புழுங்குகிறார் ஆசிரியர்.

சாதிக் கலப்புத் திருமணம் செய்தபின் மாண்டுபோன தருமபுரி இளவரசனுக்கு ஆசிரியர் இந்நூலை அர்ப்பணித்திருக்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’, ‘சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்ற உயர்ந்த கருத்துகளைக் கூறியோர் தங்கள் முன்னோர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் இனம், அவற்றைப் பின்பற்றி ஒழுகாது, சாதியால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், அவ்வழுக்கைச் சுமந்து கொண்டு அலைவதால் ஆசிரியர் வேதனைகொள்கிறார்.

அதனால்தான், “களமும் காலமும் மாற்றங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால், மனோபாவங்களில் பெரும் மாறுதல் ஏற்படவில்லை,” என்று நூலின் முன்னுரையிலேயே தமது வருத்தத்தை அவர் பதிவிட்டுவிடுகிறார்.

வெள்ளந்தி மனிதர்கள் வாழும் இடங்களாகக் காட்டப்படும் சிற்றூர்களில்தான் சாதிய நோய் புரையோடிப்போயுள்ளதை ஆசிரியர் சுட்டுகிறார். 

அனைத்துலக புக்கர் பரிசு கைசேர்வதோடு, ‘பூக்குழி’யில் இருந்து கிளம்பும் அனலில் சாதியமும் பொசுங்கிப்போனால் அது ஆசிரியருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

அனைத்துலக புக்கர் பரிசு

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் வெளியிடப்பட்ட சிறந்த புனைகதைக்கு ஆண்டு தோறும் அனைத்துலக புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. வெற்றிபெறும் நூலுக்கு 50,000 பவுண்டு பரிசுத்தொகை கிடைக்கும். அது நூலின் மூலப் படைப்பாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். அனைத்துலக புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ. அவருடைய ‘ரெட் சமாதி’ என்ற இந்தி நாவலுக்கு சென்ற ஆண்டு இப்பரிசு கிடைத்தது. அமெரிக்கரான டெய்சி ராக்வெல், ‘டோம்ப் ஆஃப் சேண்ட்’ என்ற தலைப்பில் அதனை மொழி பெயர்த்திருந்தார். இம்முறை மொத்தம் 13 நூல்கள் பரிசுக்கான நீள்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், அது இன்று ஏப்ரல் 18ஆம் தேதி ஆறு நூல்கள் கொண்ட குறும்பட்டியலாகச் சுருக்கி அறிவிக்கப்படும். சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.10 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வை யூடியூப், டுவிட்டர், ஃபேஸ்புக் வழியாக நேரலையாகக் காணலாம். விருதுபெறும் நூல் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!