கிழக்கு இந்தியப் பகுதியிலுள்ள வங்கத்திலும் ஒடிசாவிலும் பாரம்பரியமாக ஆடப்படும் ஒடிசி நடனத்தைச் சிங்கப்பூரில் கற்பிக்கும் அமைப்புகளில் ஒன்றான குரு தேவபிரசாத் நிருத்யா தரா, ‘பிரதிதவாணி’ என்ற பெயரில் ஒடிசி கலைநிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது.
தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நவம்பர் 8ஆம் தேதி இரவு சிங்போஸ்ட் கலையரங்கத்தில் நடந்தேறியது.
கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் மனிதவள துணை அமைச்சரான திரு தினேஷ் வாசு தாஸ், தம் துணைவியாருடன் இந்நிகழ்ச்சிக்கு வருகை அளித்தார்.
நடனப் பள்ளியின் இயக்குநர் சஸ்மிதா பாலின் வழிநடத்துதலில் நான்கு வயது மழலையர் முதல் நாற்பத்தெட்டு வயது முதியோர் வரை பலதரப்பட்ட நடனமணிகள் மேடையேறினர்.
ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் திறனுக்கேற்றபடி ஆடிக் காண்பித்த பல்வேறு அங்கங்களைக் கொண்ட செழுமைமிக்கப் படைப்பாக நிகழ்ச்சி அமைந்தது.
2013ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, பத்தாண்டுகளுக்கு மேலாக 100க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கற்பித்துள்ளது. ஒடிசி நடனம் ஆழமான, சிறப்பு நுணுக்கங்களுடன் இங்கு கற்பிக்கப்படுவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏழு மாதங்களாக அனைத்து மாணவர்களும் கடினமாக உழைத்து இந்த நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகினர்.
வாரந்தோறும் நடன வகுப்புகளின்போது நடனப் பயிற்சி மேற்கொள்வது மட்டுமல்லாது, இந்நடனமணிகள் வெள்ளிக்கிழமைதோறும் தங்கள் வேலை அல்லது பள்ளி முடிந்து பல மணி நேரம் பயிற்சி மேற்கொண்டனர்.
ஒத்திசைவுடனும், இணக்கத்துடனும், குறைபாடில்லாமலும் இருப்பதை உறுதிசெய்ய மாணவர்கள் அனைவரும் நடனப் பயிற்சியை மேற்கொண்டார்கள்.
“நிகழ்ச்சி நாள் நெருங்கும்போது எனக்குப் பதற்றமாக இருந்தது. ஆனால் எனக்கும் எனது குழுவினருக்கும் முனைப்பும் உந்துதலும் இருந்ததால் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். எனது சக நடனமணிகளுடன் இந்த நிகழ்ச்சியில் குடும்பங்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் நடனமாடியது மகிழ்ச்சி அளித்தது,” என்று நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது பிரியா தாஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்துகொண்ட திருமதி சந்திப்தா, இந்நிகழ்ச்சி தம் மனத்தை நெகிழ வைத்ததாகக் கூறினார்.

