பக்திப்பெருக்கோடு கூடிய சைவ சமய நாடகத்தை ஆண்டுதோறும் வழங்கி அன்பர்களை மகிழ்வித்துவரும் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, இம்முறையும் மாறுபட்ட இசை நாடகம் ஒன்றை நடத்தியுள்ளது.
தமிழ் சைவ சித்தாந்த ஆர்வலர்கள் பலராலும் அதிகம் அறியப்படாத கழறிற்றறிவார் எனப்படும் சேரமான் பெருமாள் நாயனார் கதையை எடுத்துக்காட்டும் நாடகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) அரங்கேறியது.
கிட்டத்தட்ட 900 பார்வையாளர்கள் இந்நாடகத்தைக் காண திரண்டிருந்தனர். இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரின் பத்தாவது நாடகம் இது.
சேக்கிழார் எழுதிய பெரியபுராணக் குறிப்புகளின்படி, தற்போது கேரளத்திலுள்ள கொடுங்கோளூரில் சேர மன்னர் மரபில் பிறந்த சேரமான் பெருமாள், சிவபக்தியுடன் வளர்ந்து திருவஞ்சைக்களத்து ஆலயத்தின் மகாதேவரை வழிபட்டு வருவதை நாடகத்தின் தொடக்கம் காண்பிக்கிறது.
நாட்டின் அரசராகப் பொறுப்பேற்கும்படி அமைச்சர்கள் தம்மை நாடியதை அடுத்து, பெருமாக்கோதையார் எனும் பெயர்கொண்ட சேரமான் பெருமாள் சிவபெருமானிடம் முன்வைக்கும் வேண்டுகோளுக்கு அசரீரி குரல் பதிலளித்த காட்சி, உணர்வுபூர்வ நடிப்பாலும் நயத்துடன் புகுத்தப்பட்ட மேடைக் கலைக்கூறுகளாலும் உருக்கமாக இருந்தது.
சேரமான் பெருமானாக நடித்த மாணவர் ப்ரவீன் காசியின் முகப்பொலிவும் உருக்கமும் பணிவும் நிறைந்த முகபாவனையும், இறையுணர்வு ததும்பும் நடிப்பும் இந்நாடகத்திற்குச் சிறப்பு சேர்த்தன.
பாரம்பரிய நயமும் தொழில்நுட்பப் புதுமையும்
உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியைத் திருநீறு பூசிய அடியார் எனக் கருதி, அவரைக் கைக்கூப்பித் தொழுத சேரமான் பெருமாளின் எளிமை, பார்ப்போரை நெகிழ்வுறச் செய்யும் காட்சிகளில் ஒன்றாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நாயன்மார்களில் தனித்துவ இடம் வகிப்பவராகவும் சிவபெருமானின் மாற்றுவடிவமாகவும் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரைச் சேரமான் பெருமாள் சந்தித்து, நட்புணர்வில் கைகோத்தது மற்றோர் அழகிய காட்சி. சுந்தரராக நடித்த மீனாட்சி சுந்தரமும் தேர்ந்த முகபாவனை வழியாகத் தம் திறமையை வெளிப்படுத்தினார்.
நகர்வலத்தின்போது யானையில் சேரமான் பவனி வந்தது, ஐயாரப்பர் தரிசனத்தை அடியவர்களுக்கு நல்க காவிரி ஆறு வழிவிட்டது, திருவஞ்சைக்களத்தில் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே வெள்ளை யானைமீதும் வெண்புரவிமீதும் ஏறியது ஆகிய காட்சிகள், வரைகலையின்மூலம் மின்திரையில் காண்பிக்கப்பட்டன. சேரமான் பெருமாளாகவும் சுந்தரராகவும் பாத்திரம் ஏற்றவர்களின் தோற்றத்தை வரைகலை நன்கு காண்பித்ததும் மற்றுமொரு சிறப்பு.
தவிர, பரதநாட்டியம், அடிமுறை நடனம், மோகினியாட்டம், கேரள மேளம் உள்ளிட்ட அங்கங்களையும் நாடகம் கொண்டிருந்தது.
காயத்திரி சங்கரநாராயணன், டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் ஓதுவார் உள்ளிட்டோரின் பாடல்கள் இடம்பெற்ற நாடகத்தின் நேரடி இசையும் பாடலும் வழக்கம்போலச் சிறப்பாக இருந்தன.
நாடகத்தின் முடிவில் பார்வையாளர்களுக்கு சேரமான் பெருமாள் புராணத்தின் சித்திர புத்தகமும் இரவு உணவும் வழங்கப்பட்டது.
ஒன்றுதிரண்ட உள்ளங்கள்
சேரமான் பெருமாள் நாயனாரின் கதையைப் பிறரிடம் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற ஆவலால், பத்துப் பேர் கொண்ட குழுவுடன் அவரைச் சித்திரிக்கும் முடிவை எடுத்துக்கொண்டதாக தமிழ்மொழி அறிஞரும் முன்னாள் பொறியாளருமான அ கி வரதராஜன் தெரிவித்தார்.
170 பேரின் அன்பும் உழைப்பும் இந்நாடகத்திற்காக ஒன்றுசேர்ந்ததையும் திரு வரதராஜன் குறிப்பிட்டார்.
பெரியபுராணத்திலிருந்து நாயன்மாரைப் பற்றி மேலும் பல குறிப்புகளைப் படித்து, பின்னர் நாடகத்திற்காக 30, 35 பாடல்களை எழுதியதாக திரு வரதராஜன் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட செப்டம்பர் மாதத்தில் கோயம்புத்தூரில் இருந்தபோது அவற்றை எழுதிய பின்னர், திருவஞ்சிக்குளம் என்று தற்போது அழைக்கப்படும் திருவஞ்சைக்களத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.
“எந்த மண்ணிலிருந்து குதிரையும் யானையும் விண்ணிற்குக் கிளம்பியதோ, அங்குள்ள சிவபொருமானிடம் நான் எழுதியதை வைத்து வழிபாடு செய்தேன்,” என்றார் திரு வரதராஜன்.
உயிரோவிய வரைகலைக்காக கோயம்புத்தூரில் கலைஞர் கோவேந்தனின் கைவண்ணம் பயன்பட்டது.
2014ஆம் ஆண்டுமுதல் பித்தா பிறைசூடி, ‘திருநீலகண்டர்’, ‘திலகவதியார் ஒருநம்பி அப்பூதி, நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன், திருமுறை கண்ட புராணம், கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் என ஆண்டுதோறும் வெவ்வேறு நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளது இந்தக் குழு.
இந்து அறக்கட்டளை வாரியமும், ஒத்திகை இடம் முதல் உணவு வரை வழங்கிய ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயமும் ஆதரவாக இருந்து வந்துள்ளதாக திரு வரதராஜன் நன்றியுடன் குறிப்பிட்டார்

