இசை நிகழ்ச்சிகளில் தபேலா, வயலின், டிரம்ஸ் போன்ற மக்களிடையே பரிச்சயமான இசைக்கருவிகள் வாசிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், பார்வையாளர்களின் அனுபவத்தை மெருகேற்றும் முயற்சியில், இயற்கையின் அம்சங்களான நீர், காற்றின் ஓசைகளை இசையுடன் இணைத்து வழங்கியது ‘கலா உற்சவம் 2025’ஐ முன்னிட்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற ‘சமுத்ரா’ இசை நிகழ்ச்சி.
அதோடு, இசை நிகழ்ச்சியில் கண்களை மூடிக்கொண்டே இசையை ரசிக்கலாம் என நினைத்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாகக் காத்திருந்தது மணல் கலை என்ற ஒரு புதுமையான அம்சம்.
ஒவ்வோர் இசைத்தொகுப்பிலும் அந்த இசைக்கேற்ப காட்சிகளைக் கண்முன் கொண்டுவர விழைந்தது குமாரி ஸ்டெஃபனி ஸ்டேசி குஹூவின் கைவண்ணத்தில் உருவான மணற்கலை.
‘ஸ்வரிதம்’ இசைக்குழு தனது 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்த இசை நிகழ்ச்சி ஒரு புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது.
தபேலா இசைக் கலைஞரும் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவின் நிறுவனருமான நவாஸ் மிராஜ்கரின் தலைமையில் நடந்தேறிய நிகழ்ச்சி, சிங்கப்பூரின் கலை நிகழ்ச்சிகளின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
மணற்கலை, உள்ளூர் கலைஞர்களின் அசல் படைப்புகள், பல்லினக் கலாசாரம், நீர் வாத்தியங்கள் போன்ற புதுமையான அம்சங்கள் அதற்குப் பறைசாற்றுகின்றன.
எஸ்பிளனேட் கலை அரங்கத்தில் 30க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் மேடையேறிய இசை நிகழ்ச்சியில், இந்தியப் பாரம்பரிய இசைக்கருவிகள் மட்டுமன்றி சீன, மலாய், மேற்கத்திய இசைக்கருவிகளும் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
எந்தவோர் இசைக்கருவியும் மற்றொன்றைவிட சிறியதாக உணரப்படவில்லை; அனைத்துமே நிகழ்ச்சியில் சமமான முறையில் முக்கியப் பங்கு வகித்தன.
வீணையின் மீட்டுகளாக இருந்தாலும் சரி, சீனப் பாரம்பரிய காற்றிசைக்கருவியான ஷெங்-ஆக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றுக்கும் தனித்து நிற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே நேரத்தில், இசைக்கருவிகள் ஒன்றுசேர வாசிக்கப்பட்டபோது, அவற்றின் தனித்துவங்கள் கலந்து ஓர் அழகான ஒலி அனுபவமாகப் பார்வையாளர்களின் செவிகளில் பாய்ந்தன.
அதுவே சிங்கப்பூரின் பல்லின, பல சமய சமூகத்தின் அழகையும் சிறப்பையும் எடுத்தியம்பும் விதமாக அமைந்தது. கலைஞர்களாக ஒருமித்த முயற்சியுடன் சமுத்திரம் போன்ற இசையாக உருவெடுத்து, பல்லின சமுதாயத்தில் அனைவருக்கும் ஓர் இடமுண்டு என்பதை ஒரு நினைவூட்டுவதாக இசை நிகழ்ச்சி அமைந்தது.
‘பிரவஹா’ (Pravaha), ‘டேல்ஸ் ஆஃப் யமுனா’ (Tales of Yamuna), ‘ரிவர் ராகாஸ்’ (River Ragas), ‘ஜால் கதா’ (Jal Katha), ‘மல்ஹர் வர்ஷினி’ (Malhar Varshini), ‘பிஸிக்கான் சமுத்ரா’ (Bisikan Samudera), ‘வானம், பட்டு, கடல்’ (Sky, Silk and Sea), ‘கான்ஃப்ளுவன்ஸ்’ (Confluence) ஆகிய எட்டு படைப்புகளில் வெவ்வேறு
ஷியாஃபிக்கா அதா சலேஹின் (Syafiqah ‘Adha Sallehin) உருவாக்கிய பிஸிக்கான் சமுத்ரா (Bisikan Samudera), ஓராங் லாவுத் (Orang Laut) அதாவது மலாய் மொழியில் கடலோரப் பழங்குடிச் சமூகங்களின் நினைவுகூரலாக அமைந்தது.
இந்த இசைத்தொகுப்பு, கடலின் பாதுகாவலர்களாகவும் வணிக வழிசெயலாளர்களாகவும் இருந்த அவர்களது வாழ்க்கை அலைகளோடு ஒட்டிச் செல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படைப்பின் அழகை மெருகூட்ட, மணற்கலையும் அதன் நுணுக்கமான கைவண்ணங்களும் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்ததோடு, பார்வையாளர்களின் உணர்ச்சிகளையும் எழுப்பியது.
செயற்கை நுண்ணறிவு, பிரபல திரைப்பட பாடல்களைப் போன்ற போக்கைக் கடைப்பிடிக்காமல் வெவ்வேறு உள்ளூர் இசையமைப்பாளர்களின் திறமையை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற படைப்புகள் உள்ளூர் கலைஞர்கள் உருவாக்கிய தனித்துவமான அசல் படைப்புகளே.

