மலரும் நினைவுகள், மறவா உணர்ச்சிகள். இதனாலேயே பலருக்கும் பழைய ஆடைகளைவிட்டுப் பிரிய மனம் வருவதில்லை. ஆனால், அவற்றுக்கே அர்த்தமுள்ள மறுவாழ்வை அளித்தால்?
இந்தச் சிந்தனையோடுதான் தன் சக மாணவர்களுடன் ‘செகண்ட்ஸ்டிச்’ (SecondStitch) எனும் தொழில்முனைப்புத் திட்டத்தைத் தொடங்கினார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் (எஸ்பி) பொது வர்த்தக முதலாம் ஆண்டு மாணவி இராமச்சந்திரன் ரோகிணி, 17.
‘கிலூப்’ எனும் சமூக வர்த்தகத்திடமிருந்தும் சுற்றத்தாரிடமிருந்தும் முன்பு உபயோகிக்கப்பட்ட டீ சட்டைகளைச் சேகரித்து, அவற்றைக் ‘கிரோஷே’ (crochet) எனும் நூல் பின்னலின்மூலம் அழகிய பொருள்களாக வடிவமைக்கிறார்கள் ரோகிணியும் குழுவினரும்.
அவர்கள் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘செயல்மூலம் வர்த்தக அத்தியாவசியங்கள்/ பேட்டா’ (Business Essentials Through Action/BETA) எனும் ஓராண்டுகாலப் பாடத் திட்டத்தின்வழி இந்தத் தொழில்முனைப்புத் திட்டத்தைத் தொடங்கினர்.
மொத்தம் 238 வர்த்தக மாணவர்கள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் 1,000 வெள்ளி விதை நிதி (seed grant) வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் நிலைத்தன்மைமிக்க வளர்ச்சிக் குறிக்கோள்களில் ஏதேனும் (UN SDGs) ஒன்றை திட்டத்தில் வணிகங்கள் பூர்த்தி செய்யவேண்டும்.
“மாணவர்களிடத்தில் சமூகச் சிந்தனையை வளர்க்க, ஒவ்வொரு வணிகமும், ஓராண்டுக்குப் பின் பெற்ற லாபத்தை ஏதேனும் சமூக நலனுக்காக நன்கொடையளிக்க வேண்டும் எனக் கூறினோம். எனினும், வணிகத்திவ் நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பணத்தை மாணவர்கள் திரும்பக் கொடுக்கத் தேவையில்லை,” என்று தெரிவித்தார் ‘எஸ்பி’ வர்த்தக, புத்தாக்கங்கள் பிரிவின் மூத்த இயக்குநர் டான் யென் யென்.
அடுத்த கல்வியாண்டிலிருந்து (2025/2026) ‘பேட்டா’ திட்டம், ‘எஸ்பி’யின் அனைத்து வர்த்தகப் பள்ளி முதலாண்டு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ‘பேட்டா’ திட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா, ‘எஸ்பி’யில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான்.
‘என்விபிசி’ எனப்படும் தேசியத் தொண்டூழிய அறக்கொடை நிலையம், ‘மெண்டாரிங்எஸ்ஜி’, ‘எஸ்பி’ தொழில்துறைப் பங்காளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 18 வழிகாட்டிகளோடு 80 மாணவர்களும் விழாவில் பங்குபெற்றனர்.
துணை அமைச்சர் ஆல்வின் டானும் வழிகாட்டிகளும் மாணவக் குழுக்களுடன் உரையாடி, அவர்களது வர்த்தகங்களை மேம்படுத்த ஆலோசனைகள் கொடுத்தனர்.
இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குச் சில தொழில்துறைத் தலைவர்கள் அடுத்தகட்ட வழிகாட்டுதலையும் வழங்குவர்.
அடுத்த கல்வியாண்டிலிருந்து இத்தகைய முறையான (structured) வழிகாட்டுதல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 9 முதல் 11ஆம் தேதி வரை, காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள ‘எஸ்பி’ பொது வரவேற்பு விழாவில் பொதுமக்கள் மாணவர்களின் வணிகங்கள் குறித்த விளக்கக் காட்சிகளை எஸ்பி மாநாட்டு மையத்தில் (SP Convention centre) காணலாம்.
கற்றலை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
துணை அமைச்சரின் முன்னிலையில் ‘எஸ்பி’ வர்த்தகப் பள்ளியும் ‘என்விபிசி’யும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்த உறுதிபூண்டன.
இதன்வழி, ‘என்விபிசி’யின் நன்மை பயக்கும் நிறுவனங்கள் (Company of Good members/‘சிஓஜி’ உறுப்பினர்கள்) எஸ்பி மாணவர்களை வழிநடத்தி, அவர்களுக்குக் கல்வி ஆதரவையும் தொழில்துறை அனுபவங்களையும் வழங்கும்.
‘என்விபிசி’யில் ‘எஸ்பி’ மாணவர்களுக்கு வேலைப் பயிற்சிகள், ‘எஸ்பி’ ஆசிரியர்களுக்குத் தொழில்துறை சார்ந்த வேலைப் பயிற்சித் திட்டங்கள் போன்றவையும் ஒப்பந்தத்தில் உள்ளடங்கும்.
‘பேட்டா’ திட்டம்
பேப்சன் கல்லூரியின் தொழில்முனைப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘பேட்டா’ திட்டத்தை ‘எஸ்பி’ 2019ல் உருவாக்கி, 2020ல் இரு வகுப்புகளோடு தொடங்கியது.
தொடர்ச்சியான ஆய்வுகளுக்குப் பிறகு, மேம்படுத்தப்பட்ட ‘பேட்டா’ திட்டம் ‘என்விபிசி’யின் பங்காளித்துவத்தோடும் ‘மென்டாரிங்எஸ்ஜி’யின் ஆதரவோடும் உருவாக்கப்பட்டது.

