தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரம்பரியத்தை எடுத்தியம்பும் கபடிப் போட்டி

3 mins read
6b71145d-e4c5-4034-bbde-59de4337254e
கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். - படம்: திவ்யா அழகப்பன், ஃபிரேம் 2 ஃபிகர்

சிங்கப்பூரில் பள்ளிகளுக்கு இடையே நடக்கும் ஆகப்பெரிய கபடிப் போட்டி, ‘கபடி மூலம் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 26ஆம் தேதி சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளியில் நடந்தேறியது.

மூன்று பிரிவுகளைக் கொண்ட இப்போட்டி காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

15 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவுகளில் டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளி வாகை சூடியது.

தேசிய சிங்கப்பூர் கபடிக் கழகம் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்த இப்போட்டியில், 12 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 185 மாணவர்கள் பங்கேற்றனர். சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு இருமடங்கு மாணவர்கள் கலந்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“இந்த அளவிற்கு கபடி பிரபலமாவது வரவேற்கக்கூடிய ஒன்று, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கபடி இடம்பெற உள்ளது. கபடி மூலம் சிங்கப்பூருக்கு ஆறு பதக்கங்களை வென்று தரக்கூடிய அளவிற்கு கபடி வளர்ந்துள்ளதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது,” என்று தேசிய சிங்கப்பூர் கபடிக் கழகத்தின் தலைவர் சிவநேசன், 36, குறிப்பிட்டார்.

15 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் பங்கெடுத்த எட்டில் நான்கு பள்ளிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இறுதிச்சுற்றில் டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளிக்கும் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளிக்கும் இடையே நிலவிய போட்டியில் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி வெற்றிபெற்றது.

“சென்ற ஆண்டு போலல்லாமல் இவ்வாண்டு வெற்றிபெற வேண்டுமென்ற உறுதியுடன் போட்டிக்கு வந்தோம். தேசிய அணியில் சேர்ந்து கபடி விளையாடுவதற்கான ஆர்வமும் உற்சாகமும் இருக்கிறது,” என்று புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி மாணவர் சிவானந்த், 14, தெரிவித்தார்.

இவர் இரு பிரிவுகளிலும் தம் பள்ளியைப் பிரதிநிதித்து ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சால்வியான் மகிஷா புத்ரா வீரன், 15, ஆண்களுக்கான அபிமன்யு விருதைப் பெற்றார்.

“என் நண்பன் மூலம் கபடியைப் பற்றித் தெரிந்துகொண்டேன். போட்டிக்காகப் பயிற்சி செய்யத் தொடங்கியபோது எனக்கு இந்த விளையாட்டின்மீது ஒரு தனி ஈடுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கபடி விளையாட முயல்வேன்,” என்றார் அவர்.

அவர் இந்திய மாணவரில்லை என்றாலும், தமிழர் பாரம்பரிய விளையாட்டை மிகுந்த உற்சாகத்துடன் கற்றுச் சிறப்பாக விளையாடினார்.

ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள்.
ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள். - படம்: திவ்யா அழகப்பன், ஃபிரேம் 2 ஃபிகர்

18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் பங்கெடுத்த ஏழில் நான்கு பள்ளிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இறுதிச்சுற்றில் டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளிக்கும் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளிக்கும் இடையே நிலவிய போட்டியில், டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளி வெற்றிபெற்றது.

“முதல்முறையாக நான் கபடி விளையாடுகிறேன். ஒரு மாதத்திற்குமேல் பயிற்சி செய்தோம். தொடர்ந்து கபடிப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளது,” என்றார் வெற்றிபெற்ற மாணவர் சித்தார்த் முரளிதரன், 15.

பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட மாணவிகள்.
பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட மாணவிகள். - படம்: திவ்யா அழகப்பன், ஃபிரேம் 2 ஃபிகர்

பெண்களுக்கான பிரிவில் ஐந்து மாணவிகள் கொண்ட ஐந்து குழுக்கள் போட்டியிட்டன. மூன்றாம் இடத்தில் பார்ட்லி உயர்நிலைப்பள்ளியும் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளியும் பதக்கங்களை வென்றன. இரண்டாவது இடத்தை தேசியத் தொடக்கக் கல்லூரியும் முதல் இடத்தை டிபிஎஸ் அனைத்துலகப் பள்ளியும் தட்டிச் சென்றன.

தேசியத் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த ஹரிணி ஜெயக்குமார், 16, பெண்களுக்கான அபிமன்யு விருதைப் பெற்றார்.

“இதற்கு முன்பு நான் கபடி விளையாடாததால் எனக்கு முதலில் பயமாக இருந்தது. ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்து இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்