மாறுபட்ட திகிலூட்டும் அனுபவங்களை வழங்கிய ‘சம்திங் ஸ்ட்ரேஞ்ச்’ (Something Strange) திருவிழா இந்த ஆண்டு தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறவுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழா ‘பேர்ல்ஸ் ஹில்’ வளாகத்தில் நடைபெறும்.
“சென்ற ஆண்டு மூன்று விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பத்து விதமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்காக அனுபவம் வாய்ந்த பத்து பங்காளிகள் இணைந்துள்ளனர்,” என்று தெரிவித்தார் விழாவின் தயாரிப்பாளர் சலீம் ஹாடி.
இந்தத் தனித்துவமான விழாவில், ‘க்ரோ கோஸ்ட் ஹன்டர்ஸ்’ குழுவினருடன் இணைந்து பழங்காலத்திலிருந்து சொல்லப்படும் கதைகளில் வரும் திகில் கதைக்களங்களுக்கு நேரடியாகச் சென்று ஆராயும் அனுபவம் ஏற்படுத்த ‘நிழல்களில் ஒரு துணிச்சலின் சோதனை’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘செருனை (serunai), சுவோனா (Suona)’ ஆகிய தெற்காசிய காற்றிசைக் கருவிகளுக்கும் ‘கோஞ்ச்’ எனும் சங்கு, ‘கெரிஸ்’ எனும் மாய சக்தி பொருந்தியதாக நம்பப்படும் வாள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகள் தொடங்கி, போர், அது சார்ந்த அமானுஷ்யக் கதைகள் ஆகியவற்றை ஆராயும் ‘த கெரிஸ் கீப்பர்’ எனும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
பயமுறுத்தும் விதமாக அமைந்த முகங்கள், பாவனைகள், பொருள்கள் உள்ளிட்டவற்றை உருவகப்படுத்தி வரையக் கற்றுத்தரும் ‘சினிஸ்டர் ஸ்கெட்செர்ஸ்’ எனும் பயிலரங்கும் இடம்பெறுகிறது.
“நடப்புக்கு மாறானவற்றில் ஆர்வம் கொண்டோருக்கு இந்த விழா குதூகலம் தரும். ஆராயப்படாத, பேசத் தயங்கும் பல கதைகளை விவாதிக்கும். வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் வெவ்வேறு கலாசாரங்களின் அம்சங்களையும் ஆராயும் நோக்கில் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் விழா இயக்குநர் யூஜீன் டே.
மேலும் இவ்விழாவில், திகில் சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்குவோர்க்கான பயிலரங்கு, பழங்கதைகள், நாட்டுப்புறவியல் சார்ந்த கதைகளைப் பேசும் ஆக நீளமான வலையொளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.