அனைத்துலக மேடைகளில் சிங்கப்பூர்க் கொடியை வானுயர உயர்த்திவரும் பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஸ்டீஃபன் சகரியா, முதன்முறையாகச் சிங்கப்பூரில் இசைநிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
சனிக்கிழமை அக்டோபர் 18ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு சன்டெக் சிங்கப்பூரின் ‘எங்கேஜ்’ அரங்கில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஸ்ரீநிஷாவும் பாடுவார். நேரடி வாத்திய இசையும் இடம்பெறும். ‘ஒன்க்ரூஎஸ்ஜி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறது. மாஸ்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், நிகழ்ச்சிக்கான இணை ஏற்பாட்டாளர்.
இதற்குமுன், செப்டம்பர் 27ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் இசைநிகழ்ச்சி வழங்கியிருந்தார் ஸ்டீஃபன்.
“நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இசையில் மகிழ்ச்சியாகத் திளைக்கலாம். அதையும் தாண்டி, இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்,” என்றார் 36 வயது ஸ்டீஃபன்.
ஸ்டீஃபனின் குரலிலுள்ள உணர்ச்சிகள் அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்துகின்றன. “பாடல்வரிகள் எழுதுவதில் நான் கைதேர்ந்தவனல்ல. அதனால் நான் சொல்லவிரும்பும் விஷயங்கள் ராகமாக வரும்,” என்றார் ஸ்டீஃபன்.
மனக் கஷ்டங்களுடன் வருபவர்கள் தம் மனத்திலுள்ள பாரத்தை இறக்கிவைக்க உதவும் வகையில் தம் இசைநிகழ்ச்சிகள் அமைவதாகக் கூறினார் ஸ்டீஃபன்.
“என்னை ஆதரித்துவரும் ரசிகர்களை நேரில் கண்டு தெரிந்துகொள்வதற்கு இது எனக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்,” என்றார் ஸ்டீஃபன்.
இலட்சியங்களும் தியாகங்களும்
சிறிய நாட்டைச் சார்ந்த சுயேச்சைக் கலைஞரால் திரையிசை இசையமைப்பாளருக்கு நிகரான பாடல்களை வழங்க முடியும் என்பதை நிரூபித்துவருபவர் ஸ்டீஃபன்.
தொடர்புடைய செய்திகள்
‘சாரல் மழையா’ எனும் அவருடைய முதல் பாடலே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, ‘உசுரையே தொலைச்சேன்’, ‘சகியே’, ‘விலகாதே’, ‘கண்ணோரம்’ என அவர் வெளியிடும் ஒவ்வொரு பாடலும் பிரபலமடைந்தது.
2021ல் ஸ்டீஃபன், சூரியவேலனுடன் வெளியிட்ட ‘அடி பெண்ணே’ பாடல் யூடியூப்பில் 431 மில்லியன் முறைக் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 17வது எடிசன் விருதுகளில் ‘தலைசிறந்த அனைத்துலகப் பாடகர்’ விருதை வென்றார். ‘பிஹைன்ட்வுட்ஸ்’ வழங்கும் ‘அதிகம் கொண்டாடப்படும் சுயேச்சைப் பாடகர்’ விருதையும் வென்றுள்ளார். இவ்வாண்டு ‘பிரதான விழா’வில் ‘வான் வருவான்’ தொடரில் அவர் வெளியிட்ட ‘நீதானே’ பாடலுக்காக ‘சிறந்த சொந்தப் பாடல்’ விருதை வென்றார்.
ஸ்டீஃபனின் குடும்பத்திலேயே இசை முக்கிய இடம் வகிக்கிறது. அண்ணன்கள் இருவரும் இசைக் கருவிகள் வாசிப்பவர்கள். பத்து வயதில் டிரம்ஸ், 17 வயதில் பியானோ, பின்பு கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொண்டார் ஸ்டீஃபன். “நான் முறையான இசை வகுப்புகளுக்குச் சென்றதில்லை. அனைத்தும் கேள்வி ஞானம்தான்,” என்றார் ஸ்டீபன்.
“பலருக்கும் இசையுலகில் நுழைய ஆசை உள்ளது. ஆனால் ஆசை மட்டும்தான் உள்ளது. அவர்களால் தொடங்க முடிவதில்லை. இந்தத் தொடக்கத்திற்குத் தியாகம் தேவைப்படுகிறது. நான் அனைத்தையும் தியாகம் செய்தேன்,” என்றார் ஸ்டீஃபன்.
பல பகுதிநேர வேலைகளைச் செய்தாலும், ஸ்டீஃபனின் இலட்சியம் அனைத்தும் இசையையும் நடிப்பையும் சார்ந்திருந்தது.
“27 வயது முதல் 31 வயது வரை நான் என் மற்ற வேலைகளை விட்டுவிட்டு இசையிலேயே முழு மூச்சாக இறங்கினேன். பொதுவாகவே, எந்த வேலைக்கும் செல்லாமலிருந்தால் யாராக இருப்பினும் ஏதேனும் சொல்வார்கள்; ஆனால் என் வீட்டில் அப்படிச் சொல்லவில்லை,” என்றார் ஸ்டீஃபன்.
“ஸ்டீஃபன், உன் பாடலை வானொலியில் கேட்டேன்,” எனத் தாயார் கூறிய நெகிழ்ச்சியான தருணங்களைப் பற்றி மேடையில்கூட பேசியுள்ளார் ஸ்டீஃபன்.
“நான் எதையோ பின்தொடர்கிறேன் என்பதை உணர்ந்து என் தந்தை என்னை நம்பினார். அவரது நம்பிக்கைக்காகவே நான் சிறப்பாகச் செய்கிறேன்,” என்றார் ஸ்டீஃபன்.
ஸ்டீஃபன் சகரியாவின் இசைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை https://lnk.ink/MhOk7 இணையத்தளத்தின்வழி ஆர்வமுள்ளோர் வாங்கலாம்.