சிரிப்புதான் சிறந்த மருந்து என்பது ஆங்கில பழமொழி மட்டுமல்ல. அதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக நகைச்சுவை உணர்வும் சிரிப்பும் நலமான மூப்படைதலுக்கு உதவும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன.
சிரிக்கும்போது ரத்தத்தில் உயிர்வாயு பெருகி ரத்த ஓட்டம் சீர்படும். அத்துடன் மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்கும்போது மூளையில் உற்சாக உணர்வை ஏற்படுத்தும் எண்டோர்ஃபின் எனப்படும் புரதக்கூறுகள் கோர்ட்டிசோல் எனப்படும் சுரப்பிகள், நோய் எதிர்ப்பு அணுக்கள் ஆகியவை மூளையிலும் உடலிலும் வெளியாகும் என்றார் நரம்பியல் மருத்துவர் மேட் பெல்லஸ்.
இதனால் சிரிப்பு இருக்கும் இடத்தில் பதற்றம், குழப்பம் போன்றவை தோன்றாது.
மேலும், சிரிக்கும்போது மார்பு வயிற்றிடைப் பகுதிக்கு பயிற்சி கிடைப்பதுடன், இருமல் மேம்படும் என்று அமெரிக்க மருத்துவர் ரெபேக்கா ஏப்நாண்டே கூறினார். ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி போன்ற நுரையீரல் பிரச்சினைகளால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சளி வெளியாக இது உதவும் என்றார் அவர்.
உண்மையாக வாய்விட்டுச் சிரிக்கும்போது இதயத் துடிப்பு 10 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் உடல் அதிக கேலரிகளை எரிக்கும் என்றும் வாண்டர்பல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிரிக்கும்போது தசைகள் தளர்வடையும், வலி குறையும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அது மட்டுமல்ல தனியாகவும் ஒரு பயிற்சியாகவும் சிரிப்பதையும்விட இயற்கையாகவும் சுற்றத்தாருடன் இணைந்தும் சிரிப்பது உடல்நலனுக்கும் மனநலனுக்கும் உகந்தது என்று டாக்டர் பெல்லஸ் கூறினார்.
நகைச்சுவை, பழைய நினைவுகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டு சிரிக்கும்போது நட்பு வட்டம் பெருகும். தனிமையான சூழலில் உள்ளதால் ஏற்படும் மன இறுக்கத்தை இது குறைக்கும் என்று அவர் சொன்னார்.
சிரிப்பதால் மூளைச் செயல் பாடு மாறும் என்றும் பல்லாண்டுகள் தியானம் செய்பவர்களின் மூளையில் நோயைக் குணப்படுத்தும் காமா கதிர் அலைகள் தூண்டப்படும் என்றும் மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன. சிரிப் பவர்களின் மூளையிலும் இதைப் போலவே காமா கதிர் அலைகள் தூண்டப்படுகின்றன.
சிறிது நேரம் சிரித்தாலும் தெளிவான சிந்தனையையும் மற்றவர்களுடன் வலுவான பிணைப்பையும் பெற முடியும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் நேட்டலி கிறிஸ்டீன் டாட்டிலோ விளக்கினார்.
தன்னைத் தானே கிண்டலடித்துக் கொள்வது, சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்ப்பது போன்றவற்றைச் செயது சிரிப்பை வரவழைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், வாழ்வில் நன்றி சொல்ல காரணங்களை அன்றாட நாட்குறிப்பில் எழுதுவதுபோல ஒவ்வொரு நாளும் சிரிப்பை ஏற்படுத்திய மூன்று காரணங்களை எழுதி வந்தால் பதற்றம் குறையும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

