அளவுக்கு அதிகமான உப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், வாதம் போன்ற நோய்களுக்கு இட்டுச்செல்லும். அதனால் பல வாடிக்கையாளர்கள் உப்புக்கு மாற்றுவழிகளை நாடி வருகின்றனர்.
அவற்றில் கடலுப்பு, இமாலயக் கடலுப்பு போன்றவை அடங்கும். தற்போது பல கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைவிட இவை நலமிக்கவை என்றும் பலர் நம்புகின்றனர். குறிப்பாக இளஞ் சிவப்பு நிறத்தில் உள்ள இமலாயக் கடலுப்பில் உடலைக் குணப்படுத்தும் அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சாதாரண உப்புக்கும் இமாலயக் கடலுப்புக்கும் அதிக வேறுபாடு இல்லை என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கில் பணியாற்றும் இதயநோய் சிகிச்சை நிபுணர் ரெஜிஸ் ஃபெர்னாண்டஸ், கடலுப்பு, கல்லுப்பு, இமாலயக் கடலுப்பு எல்லாமே உப்புதான் என்று வலியுறுத்தினார்.
தினமும் ஒரு தேக்கரண்டி உப்பை மட்டுமே உட்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது சுமார் 2,000 மில்லிகிராம் அளவு உப்பு மட்டுமே. ஆனால் ஒரு தேக்கரண்டி கடல் உப்பு, இமாலயக் கடல் உப்பு, கல்லுப்பு ஆகியவற்றில் சுமார் 2,200 முதல் 2,300 மில்லிகிராம் உப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தாதுப் பொருள்கள் இருப்பதால் இமாலயக் கடலுப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதனால் அது சாதாரண உப்பைவிட நலமிக்கது என்றாகிவிடாது என்றார் டாக்டர் ஃபெர்னாண்டஸ். உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வதே நலம் காக்க சிறந்த வழி என்று அவர் கூறினார்.