பழமையில் புதுமை: அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்கள்

ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாறுவது கடினம் என்றாலும் மனதிற்கு நெருக்கமில்லாத வேலைக்கு வாழ்க்கை முழுதும் செல்வதும் கடினம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததாகச் சொல்கிறார் ஆடை வடிவமைப்புத் துறையில் கால்பதித்திருக்கும் மதுஷா சாமி.

சிங்கப்பூர் நாகரிக மன்றம் நடத்தும் வருடாந்திர நிகழ்வான ‘சிங்கப்பூர் ஸ்டோரிஸ்’ 2023ஆம் ஆண்டின் சிறப்பு அங்கீகார விருது பெற்றுள்ள இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை மருந்தியல் துறையில் பணிபுரிந்தவர்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மருந்தியல் தொழில்நுட்பம் பயின்று, கல்விக்கேற்ற வேலை, நிலையான வருமானம் என அனைத்தும் இருந்தும் திருப்தியில்லாத நிலை இருந்ததை மதுஷா உணர்ந்தார்.

சிறு வயதிலிருந்தே தனக்கு விருப்பமானதும் தன்னால் தொடர்ந்து சலிப்படையாமல் செய்யக் கூடியதும் ஆடை வடிவமைப்புதான் என்பதை உணர்ந்தார்.

அத்துறையில் கண்மூடித்தனமாக இறங்காமல் அதற்குரிய கல்வி, வழிகாட்டுதலோடு பயணிக்க வேண்டுமெனக் கருதி, எம்டிஐஎஸ் கல்விக் கழகத்தில் சேர்ந்து நாகரிக ஆடை வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் துறையில் உயர் பட்டயக் கல்வியை முடித்தார்.

அதற்குப் பின் வடிவமைப்புத் துறைக்கான பட்டப்படிப்பிலும் இவர் சேர்ந்தார்.

“21 வயதில் பணியை விட்டுவிட்டு முழுநேரமாக வடிவமைப்புத் துறையில் இறங்க முடிவு செய்தது எளிதாக இல்லை,” என்கிறார் மதுஷா.

“வடிவமைப்புத் துறை பற்றி ஏதுமறியாத என் பெற்றோர் முதலில் கவலையடைந்தாலும், பின்னர் எனது தன்னம்பிக்கையைக் கண்டு ஆதரவளிக்கத் தொடங்கினர்,” என்கிறார் தற்போது இரண்டாமாண்டு கல்வியை மேற்கொள்ளும் இவர்.

இத்துறையில் சேர்ந்த முதலாமாண்டிலிருந்தே மூத்த வடிவமைப்பாளர்களைச் சந்திப்பது, போட்டிகளைக் கவனிப்பது என முனைப்புடன் செயல்பட்ட இவர், தான் கலந்துகொண்ட முதல் மேடையில், துறையில் பல ஆண்டுகள் முன்னனுபவம் உள்ள 31 மற்ற வடிவமைப்பாளர்களுடன் தன் வடிவமைப்பையும் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றார்.

தன்னுடன் சேர்ந்து பணிபுரியும் ஊழியர்கள் யாரையும் கொண்டிராத இவர், வரைவதில் தொடங்கி துணி வாங்கி, தைப்பது வரை ஒற்றை ஆளாகச் செய்ததாகச் சொல்கிறார்.

“விருதுபெற்ற ஐவரில் ஒருவர் நான் என்பது, நான் எடுத்த முடிவு சரி என்பதை எனக்கு உணர்த்தியது. இத்துறையில் மேலும் சாதிக்க இவ்விருது தூண்டுகோலாக அமைகிறது,” என்று பெருமிதத்துடன் இவர் பகிர்ந்தார்.

“எனக்கு மிகவும் விருப்பமான 1960-70களின் வடிவமைப்பு முறைகளில் புதுமையைப் புகுத்தி, தற்காலத்திற்கு தகுந்தவாறும் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்குமாறும் செய்வதே என் இலக்கு,” என்று கூறும் இவர், கல்வியை முடித்ததும் அனுபவம் பெற்று தனக்கென ஒரு தனி வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்கவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்.

இளையர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது அவசியம்

மூன்றாம் தலைமுறை வடிவமைப்பாளர் கவிதா துளசிதாஸ் படம்: கவிதா துளசிதாஸ்

சிங்கப்பூரில் 1950களில் தொடங்கி மூன்று தலைமுறைகளாக வடிவமைப்புத் தொழிலில் ஈடுபடும் குடும்பத்திலிருந்து வந்த கவிதா துளசிதாஸ், இந்திய, ஆசிய பாரம்பரிய ஆடைகளை அனைத்து இனத்தவரும் விரும்பி அணியும் வகையில் வடிவமைத்து தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

அறியவும் ஆராயவும் பிறருக்கு அளிக்கவும் இந்திய, ஆசிய பாரம்பரியத்தில் கலை அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேற்கத்திய கலாசாரத்தை நகலெடுப்பதை விடுத்து, நம் கலாசாரத்தை பிரகடனப்படுத்துவதே தன் தலையாய நோக்கம் என்கிறார் இவர்.

சிங்கப்பூர் பன்முக கலாசார, பாரம்பரிய சின்னமான ‘ஆர்க்கிட்’ மலர் வடிவங்களை தென்கிழக்காசிய பாரம்பரிய உடையான ‘கெபாயாவில்’ சேர்த்து வழங்கியுள்ளதோடு, ‘சாரோங்’ எனும் ஆசியர் உடுத்தும் நீள உடுப்பை இந்திய சேலைபோல் இணைத்து உடுத்தும் வகையிலும் வடிவமைத்து இவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஆடை வடிவமைப்பது நெசவாளர், தையல்காரர், பூந்தையல் உள்ளிட்ட கைவினைத் தொழில் செய்வோருக்கான பணி என்று எண்ணும் காலகட்டத்தில், தனது 18வது வயதில் ஆடை வடிவமைப்புத் துறையில் சேர்ந்ததாக இவர் சொல்கிறார்.

துணியின் தன்மை, வேலைப்பாடு, உடுத்தும் பாணி என ஒவ்வோர் அம்சத்தையும் கருத்தில்கொண்டு வடிவம் தரும் நிபுணத்துவம் கொண்ட வடிவமைப்பாளர்களால்தான் பரம்பரியத்தையும் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளை உருவாக்க முடியும் என இவர் நம்புகிறார்.

பாரிஸ் ஃபேஷன் வீக், வருடாந்திர வடிவமைப்புக் காட்சி மேடைகள் உள்ளிட்ட பல களங்களில் பெயர் பெற்று விளங்கும் இவர், “பாரம்பரியம் கொண்ட பின்னணி இருந்தாலும், இப்பயணம் எளிதானதாக அமையவில்லை,” என்கிறார்.

பல பின்னடைவுகளைச் சந்தித்த பின்னரே தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகச் சொல்லும் இவர், இளம் தலைமுறையினர் தோல்வியைச் சந்திக்கவும் அதிலிருந்து மீண்டெழவும் தயங்காமல் இருந்தாலே வெற்றிப் பாதைக்கான கதவு திறக்கும் என்கிறார்.

பெற்றோரும் மூத்தவர்களும் இளம் தலைமுறை மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் தட்டிக் கொடுத்தால் அவர்கள் உயர அது பெரும் ஊக்கமாக அமையும் என்கிறார்.

இளம் வயதில் தம் ஆர்வத்தையும் தாம் சொன்ன யோசனைகளையும் தன் தாயார் நம்பியதாலேயே தம்மால் இந்நிலைக்கு உயர முடிந்தது எனச் சொல்லும் இவர், “சிங்கப்பூர் பல்லின கலாசாரத்தையும் நெடும் பாரம்பரியம் கொண்ட இந்திய ஆடைகளையும் பெருமை மாறாமல் புதிய கண்ணோட்டத்துடன் மறுவடிவமைப்பு தர தொடர்ந்து உழைப்பதே என் விருப்பம்,” என்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!