பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் விதமாக ‘சம்திங் ஸ்ட்ரேஞ்ச்’ (Something Strange) எனும் மூன்று நாள் திருவிழா நடைபெற உள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 21) மாலை தொடங்கும் இவ்விழாவின் முதல் நாளில் 30 விருந்தினர்களை உள்ளடக்கிய இரவு விருந்து நடைபெறும்.
ஆங்கிலேய வீரர்களின் விடுமுறை பங்களாவாகப் பயன்படுத்தப்பட்ட காலனித்துவ பாணி வீடுகளில் இந்தப் பிரத்தியேக விருந்து இடம்பெற உள்ளது.
விருந்தைத் தொடர்ந்து மங்கிய மெழுகுவர்த்தி ஒளியில் சாங்கிப் பகுதி குறித்து கேட்டிராத விசித்திரக் கதைகள் பகிரப்படும். பங்கேற்பாளர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வினோதமான இடங்களுக்குச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவர்.
இரண்டாவது நாள் ‘சூப்பர் நேச்சுரல் கன்ஃபெஷன்ஸ்’ (SUPERNATURAL CONFESSIONS) எனும் சமூக ஊடகப் பக்கத்தின் பிரபலங்கள் தங்களது அமானுஷ்ய அனுபவங்களைப் பகிர உள்ளனர். அவற்றுக்கும், மேலும் சிலரது காணொளி வழி அனுபவங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
‘கோல்டன் மைல் டவர்ஸ்’இல் நடைபெறும் இந்த அமர்வைத் தொடர்ந்து ‘த சப்ஸ்டன்ஸ்’ (The Substance) எனும் மாறுபட்ட திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மூன்றாவது நாள் ‘Esoteric Traditions’ எனும் மாறுபட்ட நம்பிக்கைகள் குறித்த குழு விவாதம் நடைபெறும். அதே நாளன்று நடைபெறும் ‘கோஸ்ட் மார்ட்டம்’ (Ghost Mortem) எனும் இலவச அமர்வில் சில பிரபல அமானுஷ்ய திரைப்படங்கள் குறித்து விளக்கும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
திகிலூட்டும் பாணியிலான நிகழ்வுகள் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு விருந்தாக அமையவுள்ள இந்நிகழ்வு குறித்த மேல் விவரங்களுக்கு http://linktr.ee/ssfsg என்ற இணையத்தளத்தை நாடலாம்.
தொடர்புடைய செய்திகள்
“சிலருக்கு அற்பமாகத் தெரியும் நம்பிக்கைகள் வேறு சிலருக்கு முக்கியமானதாக இருக்கும். பல்வேறு வித நம்பிக்கைகள் கொண்டோர் இணைந்து உருவாக்குவதே இச்சமூகம். அவ்வாறு, மாறுபட்ட அமானுஷ்ய, திகிலூட்டும், மாறுபட்ட நம்பிக்கை குறித்து தெரிந்து கொள்ள இந்த திருவிழா உதவும். இது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும்,” என்றார் இவ்விழாவின் தயாரிப்பாளர் சலீம் ஹாதி.
“ஒரு நம்பிக்கை குறித்த புரிதல் இல்லாதவரை அது அந்நியமாகவே தோன்றும். அவ்வாறான புரிதலை இந்த நிகழ்வு ஏற்படுத்தும்,” என்றார் நிகழ்ச்சி இயக்குநர் யூஜின் டே.