இளையர்கள் விரும்பும் நவீன அணிகலன்கள்

இளையர்கள் விரும்பும் நவீன அணிகலன்கள்

படம்: ‘தேசி பை தேசி’ ஆனந்த் சுப்பிரமணியன்

19 Oct 2025 - 4:24 pm

2 mins read

தீபாவளி அலங்காரங்களில் பாரம்பரிய உடைகளுக்கு முக்கியத்துவம் இருப்பது போலவே பலவகை அணிகலன்கள்மீதும் ஆர்வம் திரும்பும். அவ்வகையில் இவ்வாண்டு தீபாவளிக்குப் புதுவித அணிகலன்கள் இளையர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.

குறைவான எடை கொண்ட இரு நிறங்கள் கொண்ட ஆக்ஸிடைஸ்டு’ வகை அணிகலன்களை இளையர்கள் அதிகம் விரும்புவதாகக் கூறினார் ‘தேசி பை தேசி’ கடையின் உரிமையாளர் ‌ஷோபனா தியாகராஜன்.

பஃப்ளோ ரோட்டில் கடை நடத்திவரும் இவர், இவ்வாண்டு தீபாவளிக்கு, ‘இன்விசிபிள்’ அல்லது ‘ஸ்டிரிங் நெக்பீஸ்’ எனப்படும் மெல்லிய கம்பியில் ஓரிரு மலர்கள் அல்லது பதக்கங்கள் கோக்கப்பட்ட வகை அணிகலன்கள் பிரபலமாக உள்ளதாகக் கூறினார். அதிலும், ‘ஜடாவ் குந்தன்’ கற்கள் கொண்டவை அதிகம் விற்பனையாவதாகவும் தெரிவித்தார்.

‘சோக்கர்’ பாணியில் யானைகள், மலர்கள், கற்களுடன் அமைந்த பாரம்பரிய வடிவ அணிகலன்.
‘சோக்கர்’ பாணியில் யானைகள், மலர்கள், கற்களுடன் அமைந்த பாரம்பரிய வடிவ அணிகலன். - படம்: ‘தேசி பை தேசி’ ஆனந்த் சுப்பிரமணியன்

மேலும், ‘டெம்பிள்’ எனப்படும் பாரம்பரிய கோவில் நகாசு வேலைப்பாடுகளைப் போன்ற வடிவமைப்புகள் கொண்ட அணிகலன்கள் தங்கம் போலத் தோற்றமளிப்பதால் பாரம்பரிய உடைகளுடன் அணிய இவற்றை அதிகம் வாங்குவதாகவும் சொன்னார்.

இத்துடன், ‘சோக்கர்’ எனும் கழுத்தை ஒட்டியவாறு அமைந்த நகைகள், ‘மேட்னி’ எனப்படும் சற்று நீளமான சங்கிலி, ‘ஓப்ரா’ எனும் ஈரடுக்கு அணிகலன், ‘ரோப்’ எனும் வயிறு வரை நீளும் மாலைகள் ஆகியவை பலரது விருப்பமாக உள்ளன.

பட்டுச் சேலையுடன் பளபளப்பாகத் தோற்றமளிக்க விரும்புவோர் ‘டெம்பிள்’ வகை அணிகலன்கள், கல் வைத்த அணிகலன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

சற்றே பழமையான, பாரம்பரிய தோற்றத்தை விரும்புவோர்க்கான ஆரம்.
சற்றே பழமையான, பாரம்பரிய தோற்றத்தை விரும்புவோர்க்கான ஆரம். - படம்: ‘தேசி பை தேசி’ ஆனந்த் சுப்பிரமணியன்

சற்றே பாந்தமாகத் தோற்றமளிக்க விரும்பும் இளையர் மத்தியில் முத்துக்கள் பதித்த நகைகள் பிரபலமாக உள்ளன.

அதிக நிறங்கள், வடிவங்கள் இல்லாமல் எளிய தோற்றம் கொண்ட பருத்திச் சேலைகளில் நேர்த்தியாகத் தோற்றமளிக்க விரும்பும் இளையர்கள் ‘ஆக்ஸிடைஸ்டு ஜுவெல்லரி’ எனும் வெள்ளி நிற அணிகலன்களை நாடுகின்றனர்.

கோவில் நகாசு வேலைப்படுகளைப் போன்ற வடிவமைப்புகள் கொண்ட ‘டெம்பிள்’ அணிகலன்.
கோவில் நகாசு வேலைப்படுகளைப் போன்ற வடிவமைப்புகள் கொண்ட ‘டெம்பிள்’ அணிகலன். - படம்: ‘தேசி பை தேசி’ ஆனந்த் சுப்பிரமணியன்

சேலையைப் போலவே மேற்சட்டைகளுக்கு ஏற்றவாறும் அணிகலன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

‘பஃப் ஸ்லீவ்ஸ்’ வகை மேற்சட்டைகளை விரும்புவோர் ‘டோர்சாடு’ எனும் சிறு சிறு மணிகளாலான அணிகலன்களை நாடுகின்றனர். பல வண்ணங்களில் இவை கிடைப்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

தங்கள் கடையில் பல்வேறு வகை அணிகலன்களும் 25 வெள்ளி முதல் 228 வெள்ளி வரை விற்கப்படுவதாகச் சொன்னார் ‌ஷோபனா.

குறிப்புச் சொற்கள்