மகள்களை மட்டுமின்றி மகன்களையும் வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தி, மாற்றத்திற்கான விதையை வீட்டிலேயே விதைத்துள்ளார் அடித்தளத் தலைவர் செல்வராணி சிதம்பரம்.
புதிதாகத் திருமணமான சமயத்தில் தம் கணவர், வீட்டுவேலை, சமையல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை என்று அவர் கூறினார்.
ஆண்பிள்ளைகளை வீட்டுவேலைகளில் பழக்கப்படுத்தும் வழமை இல்லை என்பதால் தம் கணவர் குறித்து வருத்தப்படவில்லை என்றார் திருவாட்டி செல்வராணி. இருந்தபோதும், தம் மகன்களின் நிலை குறித்த அவரது மாறுபட்ட யோசனையை அவர் கருத்தரங்கம் ஒன்றில் வெளிப்படுத்தினார்.
சிங்கப்பூரின் பண்பாட்டுப் பன்முகத்தன்மையில் பெண்களின் பங்களிப்பு என்ற கருப்பொருளில் கருத்தரங்கம், பிரின்செப் சாலையிலுள்ள ‘த ஃபவுண்ட்ரி’ (The Foundry) கட்டடத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது.
வலுவான, பிணைப்புள்ள சமூகத்திற்கு ஆற்றல் அளிப்பது பெண் சமூகம் என்பதை வலியுறுத்தும் வகையில் சமூக நல்லிணக்கத்தை ஆதரிக்கும் பெண்கள் (#WomenForSocialHarmony Forum) நிகழ்ச்சி அமைந்தது. ஹேஷ்பீஸ் பொருளாளர் ஷுகுல் ராஜ் குமார் கருத்தரங்கை வழிநடத்தினார்.
பல கலாசாரச் சூழலில் சிறு சிறு பேச்சுவார்த்தைகள், தொடர்பாடல்களின் வழியே பிணைப்புகள் பிறக்கின்றன என்று நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளர் டாக்டர் லியோங் சான் ஹோங் கூறினார்.
வெவ்வேறு மொழி பேசும் நாடுகளுக்கு இடையே போர் மூளும் நேரங்களில்கூட மொழியறியாதபோது எதிரிகள் மீதும் தாய்மார்கள் காட்டும் பரிவு, அமைதிக்கான பாதையைக் காட்டுவதாக எஸ் ராஜரத்தினம் அனைத்துலகப் பள்ளியின் மூத்த ஆய்வாளரும் சமூக ஒருமைப்பாட்டு ஆய்வாளருமான டாக்டர் லியோங் குறிப்பிட்டார்.
தின்பண்டங்களைப் பரிமாறிக்கொள்வது முதல் அண்டை வீட்டாரின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவது வரை, பிறருக்காக நாம் மேற்கொள்ளும் பரிவுமிக்க செயல்கள் ஒற்றுமையை வளர்ப்பதாக கருத்தரங்கில் உரைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அண்டை வீட்டார் சத்தம் குறித்து ஆண்டுக்குச் சராசரியாக 2,500 புகார்கள் பதிவாகும் இந்நாட்டில் புரிந்துணர்வும் கருணையும் நிறைந்த பெண்களுக்கான தேவை இருப்பதாகவும் டாக்டர் லியோங் குறிப்பிட்டார்.
“பிறர் வார்த்தைகளை ஆழமாகச் செவிமடுப்போரே உண்மையான செயலாக்கவாதிகள். ‘அமைதிக்கான தாய்மார்கள்’ (MothersforPeace) போன்ற அமைப்புகள் இந்த அணுகுமுறைக்குச் சான்று,” என்று அவர் சுட்டினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான பஹாய் சமய அலுவலகத் தலைவர் சூசி வோங், கருத்தரங்கின் மற்றொரு பேச்சாளராக இடம்பெற்றார். ஆணும் பெண்ணும் மனிதகுலத்தின் இரு சிறகுகள் என்றும் திருவாட்டி வோங் கூறினார்.
பெண்கள் தங்கள் சொந்த நலனுக்காகப் பேசவேண்டும் என்றாலும் அதனை நல்ல முறையில், பிறர் செவிசாய்ப்பதற்கு ஏதுவாக இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
பெண்கள் அதிக எண்ணிக்கையில் தலைவராக வருவதற்கும் சமூகத்தில் அதிகம் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்று ‘பிரேக்ஃபாஸ்ட் படி’ (Breakfast Buddy) நிறுவனர் லிடியா சுசியாந்தி தெரிவித்தார்.
நல்லிணக்க உணர்வு வீட்டில் தொடங்கி தாய்மார்களால் வளர்க்கப்படும் ஒன்று என்பதை நிகழ்ச்சியில் மாதர்கள் பேசியவை வெளிப்படுத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நஸ்ஹத் ஃபஹீமா கூறினார்.

