மீடியாகார்ப் நிறுவனம், ‘யார்’ எனும் திகில் நாடகத் தொடர் ஒன்றைச் சமூக ஊடகத் தளங்களில் வெளியிட்டுள்ளது.
2017ல் வசந்தம் ஒளிவழியில் இடம்பெற்ற ‘யார்’ நாடகத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த நாடகத் தொடரில் 10 பாகங்கள் இடம்பெற்றுள்ளன.
பதினொரு நடிகர்கள் நடித்துள்ள இந்தத் தொடரின் ஒவ்வோர் அத்தியாயமும் ஏறக்குறைய இரண்டு நிமிடங்களே நீடிக்கிறது.
வழக்கமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நாடகங்கள் சிறு பாகங்களாக சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆனால், முதன்முறையாக சமூக ஊடகங்களுக்காகவே ‘யார்’ நாடகம் இயக்கப்பட்டு, குறுகிய பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
‘வீ சுப்ரீம்’ தொலைக்காட்சி திறன் போட்டியில் புதிய இளம் கலைஞர்கள் பங்கேற்ற சிலரின் நடிப்புத் திறன்களை வெளிப்படுத்துவதும் ‘யார்’ தொடரின் நோக்கமாக அமைந்தது.
டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது என இந்த நாடகத்தை இயக்கிய ஆர்.வெங்கடாச்சலம் கூறினார்.
“காணொளியில் முதல் சில வினாடிகளிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றேன்,” என்று திரு வெங்கடாச்சலம், 50, கூறினார்.
நாடகம் சுவையாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என எண்ணி, அதற்கேற்ப தனது குழுவை அவர் வழிநடத்தினார். மக்களிடையே இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தொடரில் நடித்த அனைவருக்கும் இது முதல் அனுபவம். எனவே, அனைவரின் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்பினேன். நடிகர்கள் முதல்முறையாக நடித்திருந்தாலும் பண்பட்ட நடிகர்கள்போல் தங்களது கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்தார்கள்,” என்று திரு வெங்கடாச்சலம் கூறினார்.
நாடகத்தில் நடிக்கப் பெற்றிருந்த வாய்ப்பு, தங்களுக்கு எதிர்பாராத கற்றல் அனுபவமாக அமைந்ததாகவும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்ற புதிய நடிகர்கள் இருவர் தெரிவித்தனர்.
நடிப்புக் கலைக்கு உரித்தான சவால்களையும் தொன்மையையும் பற்றி மேலும் புரிந்துகொண்டதாக இளம்பெருவழுதி அலெக்ஸாண்டர், 22, தெரிவித்தார்.
“வசனங்களை மனப்பாடம் செய்வது, குழுவுணர்வுடன் பணியாற்றுவது உள்ளிட்ட சவால்களைச் சந்தித்தேன். இந்த அனுபவம், நாடகக் கலையின் மீது மரியாதையை என்னிடத்தில் உருவாக்கியுள்ளது,” என்று அலெக்ஸாண்டர் கூறினார்.
முதல்முறையாக ஒரு முக்கியக் கதாபாத்திரம் அமைந்தது தனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவம் என ஷீனா கிரேஸ், 21 பகிர்ந்தார்.
“இந்த நாடகத்தில் நடித்தது மனத்தளவிலும் உடலளவிலும் சவால்மிக்க அனுபவமாக அமைந்தது. இருப்பினும், எனது நடிப்புத் திறனை மேம்படுத்தவும் ஒரு நடிகராக வளரவும் இந்த அனுபவம் உதவியது,” என்று ஷீனா கூறினார்.
‘யார்’ தொடரில் நடித்த அனுபவம் தங்களின் நடிப்புத் திறன்களை மேம்படுத்தியதாக நடிகர்கள் இருவரும் கூறினர்.

